×

இறவையில் கம்பு பயிரிடும் முறை: வேளாண்துறை ஆலோசனை

பழநி: இறவையில் கம்பு பயிரிடுவது குறித்து வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இறவையில் கம்பு பயிரிடுவதற்கு கோ-7, கோ (சியு) 9, ஐசிஎம்வி-221, ராஜ்-171, எக்ஸ்-7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை இட வேண்டும். எக்டேருக்கு 7.5 சென்டில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். 3க்கு 1.5மீ அளவு கொண்ட 6 படுக்கைகளை 1 சென்டில் அமைத்து அரைமீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுகையை சுற்றிலும் அமைக்க வேண்டும்.

எக்டருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்கி, நல்ல தண்ணீர் கொண்டு 3 அல்லது 4 முறை கழுவிநிழலில் உலர்த்த வேண்டும். தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் பாதிப்பை தடுக்க வேளாண் அதிகாரிகளை ஆலோசித்து விதை முலாம் பூச வேண்டும். அடிச்சாம்பால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்டலாக்சில் 6 கிராமுடன், 5 மில்லி தண்ணீர் சேர்த்து, 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.

600 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாவுடன் 1 எக்டேருக்கு உண்டான விதையை கலந்து உயிர்உரமாக விதைக்க வேண்டும். விரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, ஒரு படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளில் இருந்து பாதுகாக்கலாம். நாற்றுக்களை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3ஜி 600 கிராம் அல்லது போரேட் 10ஜி-180கிராம் தூவி இட வேண்டும். 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் நீர் உறிஞ்சிம் வரை மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.

வேளாண் அலுவலர்களின் அறிவுரையின்படி 45க்கு 15 சென்டிமீட்டர் இடைவெளியில், 3 முதல் 5 சென்டிமீட்டர் ஆழத்தில் பார்களின் பக்கவாட்டில் வேர்களை 40 லிட்டர் நீரில் 1000 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்தகலவையில் 30 நிமிடம் நனைத்து அதன்பின் நட வேண்டும். ரகங்களுக்கும், வீரிய ஒட்டு ரகங்களுக்கும் அதற்கேற்ற அளவுகளில் உரமிட வேண்டும். இது தொடர்பான கூடுதலான விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாமென வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sri Lanka ,Ministry of Agriculture , Drought, Millet, Cultivation, Agriculture, Consulting
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...