×

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது போலீஸ் தாக்கியதில் மூதாட்டி அய்யம்மாள் உயிரிழந்த விவகாரத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயிற்சி எஸ்.ஐ. ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு எஸ்.ஐ. மணி, காவலர்கள் செல்வம், இளையராஜா, சந்தோஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக உலகங்காத்தான் கிராமத்தைச் செந்தில்குமார் என்ற இளைஞர் அவருடைய தாயார் அய்யம்மாள் (55) என்பவரை அழைத்து கொண்டு சென்றார். அச்சமயம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்த முயற்சித்தனர்.

ஆனால் செந்தில்குமார் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவருடைய லத்தியை கொண்டு வாகனத்தின் மீது வீசியுள்ளார். அப்போது லாத்தியானது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி மீது பட்டு அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மூதாட்டின் உடலானது உடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று அப்பகுதியை சேர்ந்த மக்கள், உறவினர்கள் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் மேற்கூறப்பட்ட 5 காவலர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : policemen ,car collision ,policeman , Counterfeiting, vehicle testing, grandparents, fatalities, 5 cops, suspended
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு