×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. அக்டோபர் இறுதியிலும், நவம்பர் தொடக்கத்திலும் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் 3 புயல்கள் உருவாகி தமிழகத்தை விட்டு விலகிச் சென்றன அதனால், கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை இல்லை. வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வங்கம் நோக்கி சென்றுள்ள புல்புல் புயல் செயலிழந்த பிறகே, தமிழகத்தில் மீண்டும் மழை வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், நீலகிரி மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 5 செ.மீ மழையும் கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Pondicherry , Temperature, Tamil Nadu, Puduvai, Rain, Chennai Weather Center
× RELATED காற்றழுத்தம் வலுப்பெற்றது தமிழகத்தில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும்