×

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன? புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்க : உயர்நீதிமன்றம்

சென்னை : மாமல்லபுரத்தின் புராதன, பழமையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது
என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எதிர்காலத்தில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதத் தொடக்கத்தில் மாமல்லபுரம் குறித்து நீதிபதி கிருபாகரன் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்தது.

நீதிபதி கிருபாகரன் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்


கடந்த நவம்பர் 1ம் தேதி நீதிபதி கிருபாகரன், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மாமல்லபுரத்தின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று தொல்லியல் ஆய்வு துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, எண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களில் லைட்டிங் ஷோ அமைக்க வேண்டும். அதன் பெருமைகளையும் பல்வேறு மொழிகளில் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு, புராதான சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க கூடாது..மாமல்லபுரத்தில் குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும்சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு சுற்றுலா பணிகளின் வசதிக்காக ஆங்கில புலைமை பெற்ற காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். மாமல்லபுரத்தை புராதன கிராமமாக அறிவித்து அகழ்வாய்வு பணிகளை தொடர வேண்டும் என அந்த கடிதத்தில் நீதிபதி கிருபாகரன்  தெரிவித்திருந்தார்.

புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்க

இந்நிலையில் இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு நீதிபதி வினீத் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து இதனை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, மாமல்லபுரத்தின் புராதன, பழமையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினர்.அத்துடன் தமிழகத்தின் பெருமையாக கருதப்படும் மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மாமல்லபுரத்தை நிரந்திரமாக பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்

Tags : Photo Source ,Mamallapuram , High Court, Question, Mamallapuram, Justice Kripakkaran, Letter
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...