×

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து மதுரை, சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

மதுரை: திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்ததை கண்டித்து மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை  அணிவித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதேபோன்று மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்புக்கு பின்பு இந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என்று காவல்துறை போராட்டத்திற்கு மறுப்பு தெரிவித்து அனுமதி வழங்க மறுத்தது. மேலும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதும் நேற்று இரவு தான் காவல்துறையினர் அறிவித்தனர் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எனவே போலீசார் அனுமதி மறுத்ததை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அண்ணாநகர் முழுவதுமாக போலீசார் குவிக்கப்பட்டார்கள். இதனிடையே விடுதலை கட்சியின் நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாநகர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் நடந்து வந்தனர். அச்சமயம் போலீசார் அவர்களை கயிறு கட்டி தடுக்க முயற்சித்தனர். இதன் காரணமாக போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அண்ணா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீசார் நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவள்ளுவரை அவமதித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறை திருவள்ளுவர் சிலைக்கு ஆதரவாக நடைபெறுகின்ற போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கிறது என்று அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  இதனை போலவே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து சேலத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய அனைவரையும்  போலீசார் கைது செய்தனர்.


Tags : Madurai ,protest ,Salem ,Tiruvalluvar ,Thiruvalluvuvar Madurai ,Salem Liberation Panthers Party Struggle of Condemning Desecration , Valluvar Statue, Insult, Madurai, Salem, Liberation Panthers Party
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...