×

பகலில் கடும் வெயில், இரவில் பனிப்பொழிவு: மாறிவரும் பருவமாற்றத்தால் சம்பா நெற்பயிர் பாதிப்பு

வலங்கைமான்: வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டைவிட வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகஅளவிலும், நவம்பர் மாதத்தில் இது வரை மிகமிக குறைவான அளவே பெய்வதுடன் பகலில் கடும் வெப்பமும், இரவில் பனிப்பொழிவும் இருப்பதால் மாறிவரும் பருவமாற்றம் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக உரிய நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை கால தாமதமாக திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் வாய்கால்களில் போதிய தண்ணீர் வரவில்லை. அதனையடுத்து டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவமைழையின் உதவியோடு ஒருபோக சம்பா சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கால தாமதமாக சாகுபடி பணிகள் துவங்கப்படுவதாலும், தண்ணீர் பாசனத்திற்கு போதுமான அளவு மேட்டூர் அணையில் இருப்பு இல்லாததாலும் நீண்ட கால ரகத்தினை தேர்வு செய்யாது குறைந்த கால ரகத்தினையே தேர்வு செய்து அதனை சாகுபடி செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்ததை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்ட்டது. இதனையடுத்து நடப்பு பருவத்தில் வலங்கைமான் தாலுகாவில் சம்பா பத்தாயிரத்து 535 ஹெக்டேரிலும், தாளடி நான்காயிரத்து 48 ஹெக்டேரிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயந்திர நடவு, கை நடவு மற்றும் நேரடி விதைப்பு ஆகியவை மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்காயிரத்து 43 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமான அளவு இருப்பதாலும், தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் சற்று கூடுதலாக பெய்த நிலையில் அதேபோல் வடகிழக்கு பருவமைழையும் கூடுதலா பெய்யும் என விவசாயிகள் கருதினர். அதனையடுத்து நடப்பு சம்பா பருவத்தில் அதிக மழை நீரை தாங்க கூடியதும், மழை வெள்ளங்களில் அதிக அளவில் பாதிப்படையாததுமான சி.ஆர் 1009 என்ற நீண்ட கால ரகத்தினை அதிக அளவு தேர்வு செய்து பயிரிட்டுள்ளனர்.

ஆனால் டெல்டா பகுதிகளில் அக்டோபர் மாதம் கடந்த ஆண்டைவிட வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 14 செ.மீ அளவே மழை பெய்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 21 செ.மீ அளவு மழை பெய்துள்ளது, இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் முப்பது சதவீதம் அதிகமாகும். சாகுபடி பணிகள் முடிவுறும் நிலையில் வலங்கைமான் பகுதியில் வடகிழக்கு பருவமழை வழுவான துவக்கத்துடன் துவங்கி கன மழை பெய்தது. கடந்த அக்டோபர் மாத இறுதி நாளன ஐந்து நாட்களில் மட்டும் வலங்கைமான் பகுதியில் 12 செ.மீ அளவு மழை பெய்தது. பின்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நேரடி விதைப்புகள் நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக சம்பா சாகுபடி பணிகள் துவக்க நிலையில் தேக்கமடைந்தது. மேலும் சித்தன் வாழுர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பின்பட்ட சம்பா தண்ணீரில் மூழ்கியது. மேலும் அப்பகுதியில் நேரடி விதைப்பு செய்ப்பட்ட சுமார் நூறு ஏக்கர் விளை நிலம் மழை நீரில் மூழ்கி ஏரிபோல் காட்சி அளித்தது.

இந்நிலையில் நடப்பு நவம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை குறிப்பிடும் படியாக பெய்யவில்லை. வலங்கைமான் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரை சுமார் 14 செ.மீ அளவு மழை பெய்துள்ளது. அதே வேளையில் நடப்பு பருவத்தில் நவம்பர் பத்தாம் தேதி வரை மூன்று மி.மீ அளவே மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் பெய்த வடகிழக்கு பருவமழை சாகுபடி பணிகள் முடிவுற்ற நிலையில் பெய்யாதது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சி.ஆர் 1009 உள்ளிட்ட நீண்ட கால ரக பயிர்கள் நன்கு வளர லேசான மழை பொழிவு அவசியம். மழை பெய்ய பெய்ய பயிர்கள் வெள்ளதனைய மலர்நீட்டம் போல் பயிர்கள் நன்கு வளரும். பயிர்களின் வளர்ச்சி காலத்தில் போதிய மழை இல்லை யென்றால் பயிர்கள் நன்கு வளர வாய்பில்லாமல் போகும். மேலும் நவம்பர் மாதத்தில் வடகிழக்குபருவ மழை குறிப்பிடும்படி பெய்யாவிட்டாலும் மேக மூட்டத்துடன் லேசான சாரல் மழையாவது பெய்வது வழக்கம். ஆனால் டெல்டா பகுதிகளில் தற்போது பகலில் கடும் வெப்பமும், இரவில் பனிப்பொழிவும் இருப்பதால் மாறிவரும் பருவமாற்றத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை குறைந்த நாட்களில் அதிக அளவு பெய்யாமல் அதிக நாட்களில் குறைந்த அளவு மழை பெய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

Tags : Samba , Rice impact
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை