×

அஞ்செட்டி அருகே தக்கட்டியில் பூட்டிகிடக்கும் துணை சுகாதார நிலையம்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே தக்கட்டியில் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால், அவசர சிகிச்சை பெறமுடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தக்கட்டியில் கடந்த 2003-04ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கின்றது.

அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர சிகிச்கைக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கும், அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில கிராமமான உனுசன அள்ளிக்கும் செல்லும் அவல நிலை உள்ளது. போதிய செவிலியர்களை நியமிக்காததால் சுகாதார நிலைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், சுகாதார வளாகத்தை சிலர் உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சிலர் சுகாதார நிலைய கட்டிடத்தில் படுத்து உறங்கும் நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தக்கட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில், நோய் பாதிப்பிற்குள்ளாவோருக்கு உரிய சிகிச்சையளிக்க அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.

நெடுந்தொலைவிற்கு செல்ல வேண்டியுள்ளதால், அப்பகுதியில் உள்ள போலி டக்டர்களிடம் சிகிச்சை பெறும் அவலநிலை காணப்படுகிறது. எனவே, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தக்கட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், நிரந்தரமாக மருத்துவர்கள், செலவிலியர்கள் நியமித்து மலை கிராம மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : health center ,Takkatti ,Anjetti ,Auxiliary Health Center , Auxiliary Health Center
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...