×

கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்த்து டெல்லி ஜெ.என்.யூ மாணவர்கள் போராட்டம்: போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு

புதுடெல்லி: கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்த்து டெல்லி ஜெ.என்.யூ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் தண்ணீர், உணவு போன்ற சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவ சங்கங்களை ஒடுக்கும் வகையில், கல்லூரி எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றுள்ளார். இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இத்தடுப்புகளை மீறி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் குதிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் தெற்கு டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.


Tags : JNU ,Delhi ,fare hike ,campus ,protest , fee hike, dress code, Delhi, JNU, students, protest
× RELATED நீட் தேர்வு முறைகேடுகளுக்கு...