×

புல்புல் புயல் தாக்குதல்: மேற்குவங்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

கொல்கத்தா: மேற்கு வங்கம் அருகே கரையை கடந்த புல்புல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் புல்புல் புயல் கரையை கடந்தது. முன்னதாக பகல் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புல்புல் புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட சூறாவளி மற்றும் கனமழையால் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கும், வயல்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டது. மணிக்கு 135 கிலோ. மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்சார கம்பிகள் அறுந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  புயலின் காரணமாக 2,473 வீடுகள் சேதமடைந்தன. இதை தொடர்ந்து பெரும்பாலான உயிர் சேதங்கள் மரங்கள் சாய்ந்ததால் தான் என்று கூறப்படுகிறது.

மேற்குவங்கத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், வங்காளதேசத்திலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேரை காணவில்லை. தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே புயல் சேதங்களை பார்வையிட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி இன்று ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மம்தா பேனர்ஜி மீட்பு நிவாரண பணிகளை துரிதப்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மம்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி மேற்குவங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.


Tags : West Bengal ,Bulbul Storm ,population , Bulbul, Storm, West Bengal, sacrifice, number, 20, on the rise
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!