சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது  தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, சபாநாயகர் தனபால், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1985ல் சட்டபடிப்பை முடித்த ஏ.பி சாஹி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2005ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஏ.பி சாஹி 2018ல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதை மறு பரிசீலனை செய்யக்கோரிய தஹில் ரமானியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து அக்டோபர் 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இன்று பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் சுமார் 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்பின்னர் அவர் வழக்குகளை விசாரிக்க தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Justice ,Madras High Court ,Sahi ,AP , Chief Justice of Madras High Court, 49th Chief Justice, AP Sahi, sworn in
× RELATED சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...