×

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல்

டெல்லி: மறைந்த டி.என். சேஷன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில்  உள்ள அவரது இல்லத்தில் இறந்தார். அவருக்கு வயது 87. இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிவரை பொறுப்பு வகித்தார்.

ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கமிஷனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்
டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். டி.என். சேஷன் ஒரு திறமையான அரசு பணியாளர்.  அவர் இந்திய நாட்டிற்காக மிகுந்த அக்கறையுடனும் மற்றும் ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றியவர். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகம் வலிமை பெறவும் மற்றும் முடிவு எடுப்பதில் பலரும் பங்கேற்கும் வகையிலும் அமைந்தன.  அவரது மறைவு வேதனை அளிக்கிறது.  ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Electoral Commissioner ,TN Shashi ,death ,Modi , DN. Cheshan's death, PM Modi, condolences
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...