×

வன்னியர் சங்கத்தை தொடங்கிய ஏ.கே.நடராஜ் மறைவு: கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: வன்னியர் சங்கத்தை தொடங்கிய ஏ.கே.நடராஜ் மறைவுக்கு ராமதாஸ், கேஎஸ்.அழகிரி, டிடிவி.தினகரன் ஆகிய அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப் பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நடராசன் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு பொதுவாழ்வில் தன்னையே  முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமுதாயத்தினருக்கும் அவரது தொண்டர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாமக நிறுவனர் ராமதாஸ்: லார்சன் - டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு உயர் பதவியில் இருந்த ஏ.கே. நடராசன் சமுதாய நலனுக்காக பாடுபட்டவர்.வன்னிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்; முன்னேற வேண்டும் என்று விரும்பியவர். 1980ம் ஆண்டில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரே குடையில் கொண்டு வரும் பணியில் எனக்கு துணை நின்றவர்.

வன்னியர் சங்கத்தின் கிளைகளை தொடங்குவதற்காக உழைத்தவர். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி தொடக்க காலத்தில் நடத்தப்பட்ட ஒரு நாள் சாலை மறியல் போராட்டத்திற்கு  உறுதுணையாக இருந்தவர்.  ஏராளமான நூல்களை எழுதியவர். எனது மதிப்பிற்குரியவர்களில் ஒருவர்.ஏ.கே.நடராசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: பிற்படுத்தப்பட்ட சமுதாயமான வன்னியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சங்கத்தை தொடங்கிய ஏ.கே.நடராஜன் தமது 86வது வயதில் காலமான செய்திகேட்டு அதிர்ச்சியும்  துயரமும் அடைந்தேன்.ஏ.கே.நடராஜன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: வன்னியர் சங்க நிறுவனர் ஏ.கே.நடராஜன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். வன்னியர் சங்கத்தை உருவாக்கி, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும்,  சமூக முன்னேற்றத்திற்குமான விதையை ஊன்றி அவர்களது நல்வாழ்விற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் நடராஜன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அந்த சமூக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Tags : AK Nadaraj ,death ,Party leaders ,Founder ,Wanniar Association , AK Nadaraj, , Wanniar ,Association
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு