×

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதிமுக தமிழக மக்களை வஞ்சிக்கிறது: திமுக பொதுக்குழுவில் கடும் கண்டனம்

சென்னை: பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, “இரட்டை வேடமும் கபட வேடமும்” போட்டு அதிமுக ஆட்சி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வருகிறது என்று திமுக பொதுக்குழுவில் கடும் கண்டனம்  தெரிவிக்கப்பட்டது.திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்..

* முத்தமிழறிஞர் கலைஞருக்கு “மணிமகுடம்” சூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுக்குழு பாராட்டை தெரிவித்து கொள்கிறது.
*  நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவதற்கும், தமிழக வாக்காளர்களில் ஏறத்தாழ 52.67 சதவீத  வாக்காளர்களின் ஆதரவினைப் பெறுவதற்கும், அதே தேர்தல் களங்களில் சட்டமன்றத் தேர்தலில் 24 தொகுதிகளில் 13 தொகுதிகளை வென்றெடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இப்பொதுக்குழு பாராட்டுகிறது.
* பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக ஆட்சிக்குக் கண்டனம். “110 அறிவிப்புகள்”, “402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 15.19 லட்சம் பேருக்கு வேலை, மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவோம்,  நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெறுவோம். உதய் திட்டத்தை எதிர்ப்போம். ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்ப்போம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்போம். இந்தி மொழியைத் திணிக்க விடமாட்டோம்.
முத்தலாக் மசோதாவை எதிர்ப்போம் என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, “இரட்டை வேடமும் கபட வேடமும்” போட்டு அ.தி.மு.க. ஆட்சி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வருவதற்கு  திமுக பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

* அதிமுக அமைச்சரவையில் உள்ள “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல்”, இவ்வளவு மழை பெய்தும் ஏரி, குளங்கள் நிரம்பாததற்கு காரணமான 1,300 கோடி ரூபாய் தூர்வாரும்  “குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல்”, “காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல்”,
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவித்த ஊழல். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ₹40 கோடி குட்கா ஊழல் என்று வகைவகையான பல்வேறு “ஊழல்களின் உறைவிடமாக”  அதிமுக ஆட்சி நடைபெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டி மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவதற்கு திமுக பொதுக்குழு மிக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* அதிமுக ஆட்சியில் திருப்பூர் கன்டெய்னர் விவகாரம், கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான “சேகர்ரெட்டி வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு, தலைமைச்  செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில்-தலைமைச் செயலக அலுவலகத்தில் ரெய்டு, டி.ஜி.பி,யாக இருந்த டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு, முதலமைச்சரின் சம்பந்தியின் பார்ட்னர் செய்யாதுரை, நாகராஜன் வீட்டில் ரெய்டு.  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, அமைச்சர் காமராஜின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, ஈரோட்டில் ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பான ரெய்டு மற்றும் அதிமுக அமைச்சருக்கு தொடர்பு.  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில்  ரெய்டுகள், கொடநாடு ரெய்டு என்று அதிமுக ஆட்சியாளர்கள் மீது சரமாரியாக நடைபெற்ற வருமான வரித்துறை  ரெய்டுகளை எல்லாம், “துருப்புச்சீட்டாக” அச்சுறுத்தும் ஆயுதங்களாக வைத்துக் கொண்டு-அதிமுக அரசை “பிளாக்மெயிலுக்குட்படுத்தி”- வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தலையாட்டிப் பொம்மைகளாக்கி,  அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படுத்தியிருக்கிறது.  
* மத்தியில் உள்ள பாஜக அரசின் பல்வேறு தமிழ் விரோத - தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு இங்குள்ள அதிமுக அரசு முணுமுணுப்பேதுன்றித் துணை போவதுடன், மாநிலத்தில் பாஜக ஆட்சியின் மதவாத, தமிழக விரோத  கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும், ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும் அதிமுக  ஆட்சி நடத்துவதற்கும்; தமிழை, தமிழர்களை, தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கும்;  திமுக பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை அதிமுக அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும்.
* சென்னை குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு “மெகா குடிநீர்த் திட்டங்களையும்”, “கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும்” விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.
* திருவள்ளுவருக்கு, “காவி” வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை-பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும்-அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப்  பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
* உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - “பஞ்சாயத்து ராஜ்” சட்டத்தின் நோக்கத்தைச் சிதறடித்து-உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இனியும்  நீதிமன்றங்களை ஏமாற்றி காலதாமதம் செய்யாமல், விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை  நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும்,  இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
* சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றுப் படுகையின் தென் பகுதியில் அமைந்துள்ள கீழடி கிராமப் பகுதியில், இதுவரையில் நடத்தப்பட்ட தொல்லியியல் அகழ்வாய்வுகளில், ஆயிரக்கணக்கான சான்றுப் பொருள்கள் கிடைத்துள்ளன. அருகிலே  உள்ள கிராமங்களான கொந்தகை, மாரநாடு, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டுமென்கிற தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில், அங்கும் அகழாய்வு  பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று   இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஆகவே நாட்டின் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் பொருளதாரத்தையும் மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் உடனே கவனம் செலுத்திட  வேண்டும்.
* மாநில அரசிடம் உள்ள கல்வி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக ஆக்கிரமித்து மத்திய அரசிற்கு மடை மாற்ற முயற்சிக்கிறது; கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இதனால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே  இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான மறுபரிசீலனையும் மாற்றங்களும்  செய்ததாகத் தெரியவில்லை. திமுக, இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ளாது என்று பிரகடனம் செய்வதோடு; பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கான அதிகாரத்தை மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றிட வேண்டும் உள்ளிட்ட 20  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்



Tags : Tamil Nadu ,AIADMK ,False ,DMK , False promise,s AIADMK , Tamil Nadu, DMK
× RELATED பாஜகவின் பொய் பிரச்சாரம்...