×

கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு சதுரகிரி மலையேற திடீர் தடை: கயிறு கட்டி 250 பக்தர்கள் மீட்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் தொடர்மழையால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு, சனிப்பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை,  கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் சனிப்பிரதோஷத்தையொட்டி அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர். இதில், பலர் அன்று தரிசனம் முடித்து, பிற்பகலில் பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். மாலை 4.30 மணியளவில் திடீரென சதுரகிரி மலைப்பகுதிகளில் பலத்த மழை கொட்ட துவங்கியது. இதையடுத்து, கோயிலில்  இருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். மழை பெய்வதற்கு முன்பு கோயிலிலிருந்து தாணிப்பாறை அடிவாரத்துக்கு கிளம்பிய 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், சங்கிலிப்பாறை பகுதியில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதி  ஓடைகள். காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவர்களால் கடந்து வர முடியவில்லை.

 தகவலறிந்த திருவில்லிபுத்தூர் போலீசார், தீயணைப்பு படையினர் அடங்கிய மீட்புக்குழுவினர் சங்கிலிப்பாறை ஓடைப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்றனர். அங்கு ஓடையின் குறுக்கே கயிறு கட்டி, பக்தர்களை  பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் தாணிப்பாறைக்கு அழைத்து வரப்பட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், மலையில் தங்கியிருந்த 200 பக்தர்கள், நேற்று காலை 9 மணி முதல் மலையில் இருந்து கீழே இறங்கினர். அவர்களையும் ஓடைப்பகுதிகளில் கயிறு கட்டி தீயணைப்பு, வனத்துறை அதிகாரிகள் மீட்டு தாணிப்பாறைக்கு அழைத்து  வந்தனர்.சதுரகிரி மலைப்பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதை அறியாமல், தாணிப்பாறை  வனத்துறை கேட்டுக்கு முன் நேற்று காலை குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



Tags : floods ,pilgrims ,forests ,flooding , Flooding , forests , heavy rain,rope-tipping
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி