×

சேலம் வழியே இயக்கப்படும் பெங்களூரு - காரைக்கால் பாசஞ்சர் தடம் புரண்டது: ரயிலை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்

பாலக்கோடு: தர்மபுரி மாரண்டஅள்ளி அருகே நேற்று காலை பெங்களூரு-காரைக்கால் பாசஞ்சர் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், பெட்டிகள் கவிழ்வது தவிர்க்கப்பட்டு  பயணிகள் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியே காரைக்காலுக்கு, நேற்று காலை 7 மணிக்கு பாசஞ்சர் ரயில் புறப்பட்டது. காலை 9.45 மணி அளவில் ராயக்கோட்டைக்கும் மாரண்டஅள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் காடுசெட்டிப்பட்டி  என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. வளைவு பகுதியை கடந்த போது, திடீரென ரயில் இன்ஜினின் ஒருபுறத்தில் ஒரு சக்கரம் மட்டும் தடம் புரண்டு, தரையில் இறங்கியது. அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த லோகோ பைலட், மிக  சாமர்த்தியமாக உடனடியாக ரயிலை நிறுத்தினார். வளைவு என்பதால், மெதுவாக சென்ற ரயில் நின்றது. இதனால், இன்ஜினுக்கு அடுத்துள்ள பயணிகள் பெட்டிகள் கவிழவில்லை. இதன்காரணமாக பயணிகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இது பற்றி, பெங்களூரு மற்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. ரயில் நடுகாட்டில் நின்றதும், பதறியடித்துக் கொண்டு பயணிகள் கீழே இறங்கினர். ரயில் புறப்பட தாமதமாகும் என்பதால் அரைகிலோ மீட்டர்  தூரத்திற்கு நடந்து சென்று, பஸ்களில் சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

 இதனிடையே சேலம் கோட்டத்தில் இருந்து மீட்புக்குழுவினர் வந்தனர். ஈரோட்டில் இருந்தும், பெங்களூரு கோட்டத்தில் இருந்தும் மீட்பு வாகனம் வந்தது. அவற்றின் மூலம் தடம் புரண்டு, கீழே இறங்கி நின்ற ரயில் இன்ஜினை மீண்டும்  தண்டவாளத்தில் தூக்கி வைக்கும் பணி நடந்தது. இப்பணி மதியம் 2.30 மணிக்கு முடிந்தது. இதனால், 5 மணி நேரம் அந்த இடத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பஸ்சில் சென்றுவிட்டனர்.  மீட்பு பணி முடிந்ததும், மதியம் 2.30 மணிக்கு காரைக்கால் பாசஞ்சர் ரயில் சேலம் புறப்பட்டு வந்தது. முன்னதாக இந்த மார்க்கம் வழியே இயங்க வேண்டிய கோவை-லோக்மான்யதிலக் குர்லா எக்ஸ்பிரஸ் மொரப்பூர், திருப்பத்தூர் வழியே  மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி பெங்களூரு கோட்ட அதிகாரிகள் மற்றும் பெங்களூரு ஆர்பிஎப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக லோகோ பைலட் கூறுகையில், ‘பெங்களூருவில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பாதையில், மிகவும் அதிகளவு வளைவு கொண்ட இடம் இது தான். எப்போதும் இந்த இடத்தில் மெதுவாகவே ரயில் இயக்கப்படும்.  இருப்பினும் இன்ஜின் சக்கரம் தடம் புரண்டு விட்டது. பெரிய அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்து, உடனே ரயிலை நிறுத்திவிட்டேன். ரயிலை நிறுத்தாமல் இருந்திருந்தால், சுமார் 20 அடி பள்ளத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்து பெரும் சேதம்  ஏற்பட்டிருக்கும்,’’ என்றார்.




Tags : Karaikal ,Salem Bangalore ,passenger ,Passengers ,Karaikal Passenger ,Salem Operated , Operated ,Salem, Bangalore - Karaikal, Passenger derailed
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...