×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், பரிசல்கள் இயக்குவதற்கு  மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், விநாடிக்கு 10,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 14,784 கனஅடியாக அதிகரித்தது. அதேவேளையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், அணையில் இருந்து பாசனத்திற்காக  திறக்கப்படும் நீரின் அளவு, 16,000 கனஅடியில் இருந்து நேற்று 14,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 119.11 அடியாகவும், நீர் இருப்பு 92.05 டிஎம்சியாகவும் உள்ளது. ஒகேனக்கல் காவிரியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், நேற்று காலை 18,000 கனஅடியாகவும் அதிகரித்தது,  இதையடுத்து பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. மேலும், அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. வார விடுமுறையையொட்டி நேற்று பல்வேறு இடங்களிலிருந்து ஒகேனக்கல்லில்  சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஆனால், பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.



Tags : Oakenakkal Oakenakkal , 18,000 cubic feet , water, Oakenakkal
× RELATED பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச்...