×

துப்பாக்கி கல் குவாரியில் மீட்பு ரவுடி கும்பலில் சேர மறுத்தான் நெற்றியில் வைத்து சுட்டேன்: போலீஸ் காவலில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மாணவனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் கல்குவாரியில் கைப்பற்றினர்.  தாம்பரம் அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபனா. இவரது மகன் முகேஷ்குமார் (19) பாலிடெக்னிக் மாணவன். இவர், கடந்த 4ம்தேதி தனது நண்பன் விஜய் வீட்டுக்கு  சென்றுள்ளார். அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு முகேஷ்குமார் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தாழம்பூர் போலீசார் விஜய்யை கைது செய்து கடந்த 2 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்: விஜய்யின் உறவினரும் அதிமுகவை சேர்ந்த வேங்கடமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவருமான ரவியை கொல்ல அவரது எதிரிகள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அவர் தப்பிவிட்டார்.  இதனால் அவர் பெருமாட்டுநல்லூரை சேர்ந்த செல்வம் என்ற ரவுடி கும்பலை தனக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டார்.ரவியின் மகன்கள் இருவரும் ஒரு குரூப்பை அமைத்து தந்தைக்கு பாதுகாப்பாகவும் கும்பல் தலைவன் செல்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளனர். குரூப்பில் விஜய் இருந்துள்ளார்.

இதில் செல்வம் கொடுத்ததாக கூறி துப்பாக்கியை ரவியின் மகன்கள் விஜய்யிடம் கொடுத்து வைத்துள்ளனர். இந்த துப்பாக்கியை விஜய் தனது நண்பன் முகேஷிடம் காட்டியுள்ளார். மேலும் தன்னுடன் சேர்ந்து ரவுடி கும்பலுடன் சேர்ந்தால் பல  விஷயங்களை தைரியமாக செய்யலாம் என விஜய் ஆசை கூறியுள்ளார். அப்போது, குடும்ப சூழ்நிலை குறித்து கூறி, தனக்கு படிப்பு முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. படிப்பு முடிந்ததும் வேலைக்கு சென்று தாயை காப்பாற்றுதே குறிக்கோள்  என முகேஷ் கூறியுள்ளார்.
இதனால் சில காலம் அமைதியாக இருந்த விஜய், சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வந்த முகேஷிடம் மீண்டும் துப்பாக்கியை காட்டி தன்னுடன் வந்து செல்வம் குரூப்பில் சேருமாறு மிரட்டி உள்ளார். மேலும் துப்பாக்கியை முகேஷின் நெற்றி பொட்டில் வைத்து சுடுவதுபோல் காட்டி டிரிக்கரை அழுத்தியதும் ஏற்கனவே லோடு செய்யப்பட்டிருந்த குண்டு வெளியேறி முகேஷின் நெற்றியை துளைத்து தலையின் பின் பக்கமாக வெளியேறியது.  அதிர்ச்சி அடைந்த விஜய் துப்பாக்கியுடன் தப்பியோடிவிட்டார்.
பின்னர் துப்பாக்கியை நல்லம்பாக்கம் கல் குவாரியில் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக கூறியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விஜய் காட்டிய நல்லம்பாக்கம் குவாரி பகுதியில் இருந்து துப்பாக்கியை போலீசார் மீட்டனர்.


Tags : gun quarry ,gang ,gang youth ,police forehead , Gun ,Quarry, Rowdy , Youth shot
× RELATED 107 வயது முதியவர் மீட்பு