சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்க உள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதை மறு பரிசீலனை செய்யக்கோரிய  தஹில் ரமானியின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து அக்டோபர் 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இன்று காலையில் பதவி ஏற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.  பின்னர், அன்று சுமார் 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்பின்னர் அவர் வழக்குகளை விசாரிக்க தொடங்குவார்.

Related Stories:

>