×

பேஸ்புக்கில் குடும்ப போட்டோ போட வேண்டாம்

* மார்பிங் செய்து தவறாக பயன்படுத்த வாய்ப்பு
* மாஜிஸ்திரேட் எச்சரிக்கை

சென்னை : பேஸ்புக்கில் குடும்ப போட்டோ போட வேண்டாம். சில விஷமிகள் அதை மார்பிங் செய்து தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக சட்ட விழிப்புணர்வு முகாமில் மாஜிஸ்திரேட் விஜயகுமார் எச்சரித்தார். சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜயகுமார் பேசியதாவது: மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், வீடு திரும்பும்போதும் தங்களுக்கு ஒரு சிலரால் ஏற்படும் பிரச்னைகளை 99 சதவீதம் பேர் பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ சொல்வது இல்லை. அவர்களின் மனரீதியிலான பிரச்னைகள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தால், அவர்கள் கவுன்சிலிங் வழங்குவர்.

1 முதல் 12 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்கு தண்டனையும், 12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனையும், 17 முதல் 18 வரையுள்ள  இளம்பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டால் 20 வருடம் தண்டனையும் வழங்கப்படும்.மேலும், நீங்கள் செல்போனை பயன்படுத்தும்போது, அதில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வலைதள பக்கத்தில் உங்களது மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவிடக்கூடாது. ஏனெனில், அந்த போட்டோக்களை ஒருசிலர் மார்பிங் செய்து தவறாக  பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறேன்.தற்போது நான் பேசியது என்ன என்பதை நீங்கள் ஒரு போஸ்ட் கார்டில் எழுதி, எனது முகவரிக்கு அனுப்புங்கள். 3 பேரை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு நீதிபதி விஜயகுமார் கூறினார்.

Tags : put ,family photos , Facebook
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...