×

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் 4,929 கோடி சாலைப்பணிகள் ரத்து

* விழுப்புரம், நாகப்பட்டினம் பாதிப்பு * மத்திய அரசு அதிரடி * தமிழகம் மெத்தனம் என குற்றச்சாட்டு

சென்னை: நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் ரூ.4,929 கோடி மதிப்பிலான 4 நெடுஞ்சாலை திட்டப்பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய பின்னடைவு  ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பாரத்மாலா திட்டத்தின் மூலம் சர்வதேச தரத்துக்க சாலை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, தமிழகத்தில் 14 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதில், ரூ.998.7 கோடி மதிப்பில்  விழுப்புரம்-புதுச்சேரி, ரூ.1294.5 கோடி மதிப்பில் புதுச்சேரி-பூண்டியங்குப்பம், ரூ.2153.4 கோடி மதிப்பில் பூண்டியங்குப்பம்-சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம்-நாகப்பட்டினம் ஆகிய நான்கு சாலை நெடுஞ்சாலை திட்டங்கள் அறிக்கை தயார் செய்து தேசிய  நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி ரூ.4929 கோடி செலவில் இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான 180 கி.மீ நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தால் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் காரைக்கால் இடையே பயணதூரம் குறைவதோடு தொழில் வளர்ச்சியும் மேம்படும் என்று  எதிர்பார்க்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. வழக்கமாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதில் 6 மாதங்களுக்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் சாலை அமைப்பு பணிகளை  அவர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு கால தாமதம் செய்தது. குறிப்பாக, இந்த  நான்கு சாலை திட்ட பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், ஒப்பந்த நிறுவனத்துக்கு கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அந்த நிறுவனத்துடன்  போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று ரூ.482 கோடி செலவில் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான இரு வழிச்சாலை திட்டப் பணிகள் நிலம் கையகப்படுத்தும் தாமதத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று  தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* தமிழகத்தில் பாரத்மாலா திட்டத்தின்  மூலம் சர்வதேச தரத்துக்கு சாலை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
* இதற்காக, 14 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார்  செய்யப்பட்டது.
* நான்கு சாலை திட்ட பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
* இதனால், சம்பந்தப்பட்ட  நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



Tags : Delay , land, acquisition ,crore
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...