×

எர்ணாவூர் மேம்பாலம் அருகே கழிவுநீர் குட்டையாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவொற்றியூர்: எர்ணாவூர் மேம்பாலம் அருகே லிப்ட் கேட் சாலையில் தினமும் மாநகரப் பேருந்து, குடிநீர் லாரி, ஆம்புலன்ஸ், கார், ஆட்டோ என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஓடியது. இதனால் இந்த சாலையில் பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலையோரம் ஏராளமான குடியிருப்புகள் இருந்ததால் துர்நாற்றம் தாங்கமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் இந்த லிப்ட் கேட் சாலை வழியாக சென்று பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் இந்த மோட்டாரை இயக்குவதில்லை. இதனால் கழிவுநீர் குழாயில் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் இந்த கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே கழிவுநீர் குழாய்களில் விடப்படுகிறது.

அடிக்கடி இந்த லிப்ட் கேட் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பல்வேறு தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் தடையில்லாமல் செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பலமுறை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கும், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Road ,sewer pond ,motorists ,Ernakavur ,Highway ,bridge ,sewage pond , Earnavoor Bridge, Sewerage
× RELATED சாலையின் குறுக்கே மரம் விழுந்தது...