×

தூய்மை இந்தியா திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த சென்னைக்கு ரூ149 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ரூ.149 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4500 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இதில் 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர். எனவே குப்பையை தரம் பிரித்து தருவதை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 1,2,3,7,11,12,14,15 உள்ளிட்ட 8 மண்டலங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் பணியை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை இறுதி செய்யும் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தனியாரிடம் உள்ள 9,10,13 ஆகிய 3 மண்டலங்களை  மீண்டும் தயாரிடம் கொடுக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொடுங்கையூர் மற்றும்  பெருங்குடியில் உள்ள கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு  கிடங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன்படி பல்வேறு முறைகள் மூலம் 400 டன் குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது.

மேலும் பூங்காக்களில் மூங்கில் தொட்டிகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இதைதவிர்த்து பல்வேறு முறைகளில் குப்பைகளை மறு சுழற்சி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதைத்தவிர்த்து ஏற்கனவே குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ள அத்திப்பட்டு, பள்ளிக்கரணை, சாத்தாங்காடு உள்ளிட்ட மூன்று கிடங்குகளில் உள்ள குப்பையை மறுசுழற்சி செய்யும் பணி ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்டுவருகிறது. இந்த பணி 12 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 149 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதற்கான மையம் மணலியில் தற்போது செயல்பட்டுவருகிறது. இதில்10 மெட்ரிக் டன் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யலாம். மேலும் 50 மெட்ரிக் டன் மையம் கொரட்டூரில் அமைக்கப்பட்டுவருகிறது. இதைப்ேபான்று 10 மையங்கள் இந்த நிதியின் மூலம் அமைக்கப்படவுள்ளன. இதைத்தவிர்த்து உணவு கழிவுகள் மற்றும் பூங்கா கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றுவதற்காக 5 உரமாக்கும் மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க தற்போது 400 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் செயல்பட்டுவருகிறது. தற்போது இந்த நிதியின் மூலம் கூடுதலாக 1590 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படவுள்ளன. நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் இயந்திரமும் இந்த நிதியில் வாங்கப்படவுள்ளது. மறு சுழற்சி செய்யப்படும் குப்பைகளிலிரும் கேஸ் தயாரிக்கும் 21 பயோ கேஸ் மையங்களும் அமைக்கப்படவுள்ளன. இதைத்தவிர்த்து பொருட்களை சேகரிக்கும் 12 மையங்களும் இந்த நிதியில் அமைக்கப்படும். இவ்வாறு ரூ.149 கோடியில் பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ள தூய்மை இந்தியா திட்டம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai , Purity India, Solidarity, Funding
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...