விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ29.7 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ஜோஸ் (61). ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2016ம் ஆண்டு பூந்தமல்லி சாலை, மேவெலூர் குப்பம் அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் வந்த மற்றொரு பைக், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பால்ஜோஸ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பால்ஜோஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 7 மாத தொடர் சகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில், கணவரின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, பால்ஜோஸ் மனைவி சிவகாமி, அவரது மகள் மற்றும் தந்தை, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சுதா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, விபத்து நடந்த போது, மனுதாரரின் கணவர் வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்திருந்துள்ளார். ஆனால், விபத்து ஏற்படுத்தியவரிடம், வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவை இல்லை. மேலும், விபத்துக்கு மனுதாரர் கணவரின் பங்களிப்பும் உள்ளது என்பதற்கான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்யவில்லை. விபத்தை ஏற்படுத்தியவர், கவனக்குறைவாகவும், விபத்து ஏற்படுத்தும் விதத்திலும் பைக் ஓட்டியதை கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, மனுதாரர் மற்றும் அவரது மகள், மாமனாருக்கு, இழப்பீடாக ரூ29.7 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : deceased , Accident, Compensation
× RELATED லாரி மோதி உயிரிழந்த எலக்ட்ரீசியன்...