×

பணி முடிந்து வீடு திரும்பியபோது கார் மோதி தலைமை காவலர் பலி: கல்லூரி மாணவன் கைது

சென்னை: தாம்பரம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி தலைமை காவலர் பலியானார். குரோம்பேட்டை, நியூ காலனி, 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு வழக்கம்போல காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்ற அவர், இரவு பணியை முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். தாம்பரம் கடப்பேரி பகுதியில் போக்குவரத்து பணிமனை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ரமேஷ் அவரது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக ஜிஎஸ்டி சாலையில் வாகனத்தை திருப்பி நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, மயிலாப்பூரில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதி பின்னர் ரமேஷ் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ரமேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தியவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, அருகில் உள்ள மசூதியின் அருகே கார் பழுதானதால், அங்கேயே விட்டு விட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஆதித்யா (21) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த தலைமை காவலவருக்கு சுமதி என்ற மனைவி மற்றும் காயத்ரி, மோனிஷா, கீர்த்தனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். விபத்தை ஏற்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள ஆதித்யா, காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஆதித்யாவின் தந்தை ரவிச்சந்திரன் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூரில் வசிப்பதும், ஆதித்யாவின் தாய் பத்ம வனத்துறையில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : college student ,home , Car, Chief Guard, Kills
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...