×

கடல் உணவு வாங்கி ரூ21 லட்சம் மோசடி: வாலிபருக்கு வலை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கனகர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (20). கடல் உணவுகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த அகமது (40) என்பவருக்கு தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அகமது, துபாயில் கடல் உணவு விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு தினேஷ் பதப்படுத்தப்பட்ட கடல் உணவு அனுப்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ21 லட்சம் மதிப்பிலான கடல் உணவை துபாய்க்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், 3 மாதமாகியும் அவர் அனுப்பிய கடல் உணவுக்கான பணத்தை கொடுக்காமல் அகமது ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் தினேஷ் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து அகமதுவை கைது செய்வதற்காக கேரளா விரைந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “கடல் உணவுகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் விதிமுறையை கடை பிடிப்பதில்லை. இதை முறைப்படுத்தினால்தான் இதுபோன்ற மோசடி சம்பவம் நடக்காமல் தடுக்கலாம். மீனவளத்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : plaintiff , Seafood, Fraud
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது