×

பழவந்தாங்கல் காவல் நிலையம் எதிரே உருக்குலைந்த மின்கம்பத்தால் அச்சம்: கண்டுகொள்ளாத மின்வாரியம்

ஆலந்தூர்: நங்கநல்லூர் 2வது பிரதான சாலை மற்றும் 18வது தெரு சந்திப்பில் பழவந்தாங்கல் காவல் நிலையம் எதிரே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பம் நொறுங்கிய நிலையில் எப்போது கீழே விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது.
இதனால், காவல் நிலையத்திற்கு வருவோர், இந்த சாலைகளை தினந்தோறும் பயன்படுத்தும் மக்கள் இந்த மின் கம்பத்தால், அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சிமென்ட் மற்றும் இரும்பு கம்பியால் ஆன இந்த  மின் கம்பத்தின் பெரும்பகுதி உருக்குலைந்த நிலையில் இரும்புக்கம்பி மட்டும் நீட்டிக்கொண்டு எலும்பு கூடு போல காணப்படுகிறது.

இது எப்போது விழுமோ என்ற அச்சம் உள்ளது. நங்கநல்லூர் மின் பகிர்மான நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த மின் கம்பத்தை மாற்றி தருமாறு அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  “இந்த மின்கம்பம் எப்போது சாய்ந்து விடுமோ என்ற பயம் உள்ளது. காற்றுடன் மழை பெய்தால் கட்டாயமாக இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழுந்துவிடும். விபத்து ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தை உணராமல்  அசட்டையாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : police station , Antique, twisted wiring
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது