×

போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பைக்குகளில் பொருத்தும் இளைஞர்கள்: அதிர்ச்சியில் உறையும் முதியவர்கள், இதய நோயாளிகள்

பெரம்பூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி இளைஞர்கள் தங்களின் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி பயன்படுத்துவதால், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒலியுடன் கூடிய சைலன்சர் (80 டெசிபல்) மற்றும் ஹாரன் (93 முதல் 112 டெசிபல்) பயன்படுத்த வேண்டும் என்பது மோட்டார் வாகன விதி. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு 1986 விதியின் கீழ், ஒலி மாசுவை கட்டுப்படுத்த டெசிபல் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அதிவேகமாக செல்லக்கூடிய அதிக குதிரை திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கி, அதில் போக்குவரத்து விதியை மறி, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி சாலைகளில் அதிவேகமாக வலம் வருகின்றனர். இவர்கள் புதிதாக வாங்கும் பைக்குகளில், சம்மந்தப்பட்ட கம்பெனிகள் சார்பில் பொருத்தப்படும் சைலன்சர்களை மாற்றி, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை (120 முதல் 130 டெசிபல்) பொருத்துவதுடன், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களையும் (140 டெசிபலுக்கு மேல்) பொருத்துகின்றனர்.

தொடர்ந்து 140 டெசிபலுக்கு மேல் சத்தத்தை கேட்கும் நிலை ஏற்பட்டால் நமது காது கேட்கும் திறனை இழக்கும், என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றை பொருட்படுத்தாமல் பலர் இதுபோன்ற விதிமீறல் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கும்போது, சைலன்சர்களில் அதிக சத்தம் வருவதுடன், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் அடித்தபடி செல்வதால், சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிரண்டு, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் அருகே ஹாரன் அடிக்கக்கூடாது என்ற விதிமுறை தற்போது பைக் ஓட்டும் இளைய தலைமுறையினருக்கு தெரியவதே இல்லை. குறிப்பாக, மருத்துவமனை பகுதியில் அதிக ஒலியுடன் கூடிய ஹாரன் அடிக்கப்படுவதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சில வருடங்களுக்கு முன்பு வரை விபத்துகள் குறைந்தளவு நடந்து வந்தன. அதை பார்க்கும்போதே மனம் பதை பதைக்கும். ஒருவித பயம் ஏற்படும்.

ஆனால் இப்போது விபத்தை விட அதிவேகமாக ஓட்டும் இளைஞர்களை கண்டால் பயமாக உள்ளது. அவர்கள் வேகமாக செல்வதுடன் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் மற்றும் ஹாரன்களை பயன்படுத்துவதால் இதயம் அதிர்கிறது. உடல் படபடக்கிறது. போக்குவரத்து போலீசாரின் கண்களுக்கு இவர்கள் ஏன் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்களா என்பது தெரியவில்லை. நமது நகரத்திற்கு தகுந்தாற்போல் 100 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களை தடை செய்யவேண்டும். நகரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக வேகத்துடன் செல்லும் அதிக குதிரை திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யகூடாத வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.

இதன்மூலம் நிச்சயம் விபத்துகளை தடுக்கலாம். பெரிய பைக்குகளில் வேகமாக செல்பவர்கள் எதிரில் வரும் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அப்பாவிகள் பாதிக்கப்படுவதை மனதில் வைத்து தமிழக அரசு இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார் மற்றும் ஆட்டோக்களிலும் சைலன்சர் மாற்றி அமைத்து அதிக ஒலி எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டால் மட்டுமே விபத்துக்கள் குறையும்” என்றனர். மெக்கானிக் ஒருவர் கூறுகையில், “கடந்த 10 வருடத்திற்கு முன் வந்த பைக்குகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பொருத்தி வந்தன.

தற்போது ஒலி மாசுவை கட்டுப்படுத்த சத்தம் குறைக்கப்பட்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த தலைமுறையினர் அதிக சத்தத்துடன் கம்பீரமாக இதுபோன்ற பைக்குகளில் வலம் வந்தனர். வண்டியின் சத்தம் கேட்டு இன்னார் வருகிறார்கள் என்று அறியமுடியும் காலம் போய், தற்போது ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த சத்தத்திற்காகவே இதுபோன்ற பைக்குகளை வாங்கி வலம் வருகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் பைக்குகளில் சத்தம் குறைவாக இருப்பதாக கருதி, குறிப்பிட்ட வகையை சேர்ந்த பெரும்பாலான பைக்குகளுக்கு, அதிக சத்தம் கொண்ட சைலன்சர்களை மாற்றுகின்றனர்.

ரூ1.5 லட்சம் முதல் ரூ2 லட்சம் வரை கொடுத்து பைக்குகளை வாங்குபவர்கள், அதில் சைலன்சர் மாற்றி கொண்டு செல்கின்றனர். சத்தத்தின் தன்மைக்கேற்ப பல வகையான சைலன்சர்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சத்தத்தையும் கேட்டு தங்களின் தேவைக்கு ஏற்றாற்போல் பொருத்துகின்றனர், ” என்றார்.

தடை செய்யப்படுமா?
புதிதாக பைக்குகள் வாங்கும் போது, அதில் சம்மந்தப்பட்ட நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சைலன்சர்களை மாற்றி, அதிக ஒலி மாசு  எழுப்பக்கூடிய சைலன்சர்களை விற்க அனுமதி உள்ளதா என்பது கூட தெரியாமல்  ஆங்காங்கே உள்ள மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும்  விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில்  விற்பனை செய்து வருகின்றனர். சத்தத்திற்கும், கவர்ச்சிக்கும் ஏற்ப விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆயிரம் ருபாய் முதல் 15 ஆயிரம்  ரூபாய் வரை சைலன்சர்கள் விற்கப்படுவதாக கடை உரிமையாளர்கள்  தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Transport, Silencer
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...