×

சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிராக 5வது மற்றும் கடைசி டி20 போட்டி சரிசமனில் முடிந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதமானதால் தலா 11 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். நியூசிலாந்து தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், கோலின் மன்றோ இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 83 ரன் சேர்த்தனர். கப்தில் 50 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), மன்றோ 46 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் செய்பெர்ட் 39 ரன் (16 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி டாம் கரன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கிராண்ட்ஹோம் 6, டெய்லர் 3 ரன்னில் வெளியேற, நியூசிலாந்து 11 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் குவித்தது. நீஷம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன், சாம் கரன், ரஷித், மகமூத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 11 ஓவரில் 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 47 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாச, கேப்டன் மோர்கன் 17, சாம் கரன் 24, டாம் கரன் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பான்டன், வின்ஸ், கிரிகோரி ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து அணியும் 11 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது.

பில்லிங்ஸ் 11, ஜார்டன் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், சான்ட்னர், நீஷம் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து 17 ரன் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணியால் 8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருதும், நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் நவ. 21ம் தேதி மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் தொடங்குகிறது.


Tags : England ,New Zealand , New Zealand, England
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...