×

ஷ்ரேயாஸ், ராகுல் அதிரடி அரை சதம்: வங்கதேசத்துக்கு 175 ரன் இலக்கு

நாக்பூர்: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், வங்கதேச அணிக்கு 175 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் மொசாடெக் உசேனுக்கு பதிலாக முகமது மிதுன் இடம் பெற்றார். இந்திய அணியில் குருணல் பாண்டியாவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 2 ரன் மட்டுமே எடுத்து ஷபியுல் இஸ்லாம் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

தவான் 19 ரன்னில் (16 பந்து, 4 பவுண்டரி) வெளியேற, இந்தியா 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தனர். ஷ்ரேயாஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வங்கதேச பீல்டர் நழுவவிட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. ராகுல் 52 ரன் (35 பந்து, 7 பவுண்டரி) விளாசி அல் அமின் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் வசம் பிடிபட்டார்.

சிக்சர்களாகப் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஷ்ரேயாஸ் 62 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் 6 ரன் மட்டுமே எடுத்து சர்க்கார் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. மணிஷ் பாண்டே 22 ரன் (13 பந்து, 3 பவுண்டரி), ஷிவம் துபே 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஷபியுல் இஸ்லாம், சவும்யா சர்க்கா தலா 2 விக்கெட், அல் அமின் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Rahul ,Shreyas ,Sreyas ,Half ,Target ,Bangladesh , Shreyas, Rahul, half a century
× RELATED சொல்லிட்டாங்க…