×

ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது எப்படி?.. தீர்ப்புக்கு உதவிய ராமாயணம், இதிகாசம், பயணக் குறிப்புகள்

புதுடெல்லி: ராமர் பிறந்த இடம் அயோத்தி தான் என்பதற்கான ஆதாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் சாசன அமர்வு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த அயோத்தியின் சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், ராமர் பிறந்த இடமான அங்கு ராமர் கோயிலை கட்டலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. இதில், எதன் அடிப்படையில் அந்த இடம் ராமர் பிறந்த இடமாக நீதிமன்றம் ஒரு முடிவிற்கு வந்தது என்பதைப் பற்றி நீதிபதிகள் தீர்ப்பில் முழு விளக்கம் அளித்துள்ளனர்.

அது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம்: இந்து மதத்தின் அடிப்படையே இதிகாசங்கள்தான். இந்து மதத்தின் அடிப்படைகள் அவற்றில் முழுமையாக வரையறுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ராமர் பற்றி அறிந்து கொள்வதற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது வால்மீகி ராமாயணம். இது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட இதிகாசமாகும். வால்மீகி ராமாயணம், ஸ்கந்த புராணம் உள்ளிட்ட இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களின் அடிப்படையில்தான் ராமர் பிறந்த இடம் அயோத்தி என இந்துக்கள் நம்புகின்றனர்.

அங்கு பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக, அதாவது 1528ம் ஆண்டுக்கு முன்பாகவே இதிகாச, இலக்கியங்களில் உள்ள சுலோகங்களில் ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என்பது பற்றி விளக்கப்பட்டு இருக்கிறது. வால்மீகி ராமாயணத் தின் 10வது சுலோகத்தில், ‘ஒட்டுமொத்த உலகின் கடவுளான ராமரை தனது மகனாக கவுசல்யா பிரசவித்தார், அவரது வரவால் அயோத்தியே ஆசீர்வதிக்கப்பட்டது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 5வது ஈரடிச் செய்யுளில் ‘ஜென்மபூமி’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தை அயோத்தி எனும் நகரைத் குறிக்கிறதே தவிர, எந்த குறிப்பிட்ட இடத்தையும் கூறவில்லை.

எனவே, அயோத்தியில் ராமரை கவுசல்யா பெற்றெடுத்தாள் என்றே வால்மீகி ராமாயணம் கூறுகிறதே தவிர, அது தசரதனின் அரண்மனையில்தான் என குறிப்பிட்டு எதையும் கூறவில்லை. இதே போல, 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்கந்த புராண செய்யுள்களிலும், ராமர் அயோத்தியில் பிறந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் அவாத்புரியில் விஷ்ணு மனித உருவமாக அவதரித்தார் என்றும், தசரதர், கவுசல்யாவின் வீட்டில் கடவுள் மனித அவதாரம் எடுத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற இதிகாங்களின் அடிப்படையிலேயே ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பிக்கை கொள்ளப்படுகிறது. இவை அனைத்தும் ஆதாரமற்றதாக இருக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். வால்மீகி ராமாயணத்திலோ, துளசிதாசரின் ராமாயணத்திலேயோ ராம ஜென்மபூமி நிலம் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை என முஸ்லிம் தரப்பு வைத்த வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்து தரப்பில் மேற்கண்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மறந்துவிட்ட வரலாறு
இந்தியாவுக்கு 17-19ம் நூற்றாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரலாற்று நிபுணர்களின் பயணக் குறிப்புகளையும், தங்களின் தீர்ப்புக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். ‘மறக்கப்பட்ட வரலாற்றின் தளர்வான துண்டுகளை பயணக் குறிப்புகளும், பழங்கால சுவடிகளும் கொண்டுள்ளன. அவற்றை எல்லாம் நீதிமன்றம் ஆழமாக ஆராய்ந்துள்ளது. சர்ச்சைக்குரிய இடம் பற்றி வெளிநாட்டு ஆய்வாளர்கள் தங்கள் பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் பூஜித்ததாகவும் அங்கு பிரார்த்தனைகள் நடந்திருப்பதாகவும் கூறி உள்ளனர்,’ என தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

மத தலைவர்களுடன் தோவல் சந்திப்பு
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களின் கூட்டத்தை தனது வீட்டில் நேற்று கூட்டினார். அவர்களுடன் 4 மணி நேரம் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘உச்ச நீதிமன்ற முடிவை மதிப்பதாக அனைத்து தலைவர்களும் கூறினர், அதை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மதத் தலைவர்கள் உறுதி அளித்தனர். நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சிலர் அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த சந்திப்பு மதத் தலைவர்களுடனான தகவல் தொடர்பை வலுப்படுத்த உதவியது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Rama ,Ayodhya ,Supreme Court ,birthplace , Ayodhya, Supreme Court
× RELATED ஸ்ரீ ராம தரிசனம்