எச்1பி விசா வைத்திருப்போருக்கு நிம்மதி: அமெரிக்காவில் வேலை செய்ய வாழ்க்கை துணைக்கு அனுமதி... கொலம்பியா நீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன்: எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவனோ, மனைவியோ  அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய கொலம்பியா மாவட்ட மேல்முறையீடு நீதிமன்றம் மறுத்து விட்டது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா, அதிக திறமை வாய்ந்த, குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கே அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 இஏடி விசா கொடுத்து  அமெரிக்காவில் பணியாற்றுவதை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கடந்த 2015ல் கொண்டு வரப்பட்டது.

அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு,‘அமெரிக்க வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையின்படி, எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ என்ற அமைப்பு, அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2016ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ‘சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா’ அமைப்பு கொலம்பியா மாவட்ட மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில், எச்-4 விசாவில் பணியாற்றும் திட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகளை அரசு மும்முரமாக செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘‘எச்-1பி விசா வைத்திருப்போரின் கணவனோ அல்லது மனைவியோ அமெரிக்காவில் பணியாற்றுவதை சட்டப்படியாக்கும் திட்டத்தை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை ஆரம்ப கட்டத்தில் மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்ய கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகிறோம். கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும். எச்-1பி விசா வைத்திருப்போர் நிரந்தர குடியுரிமை பெற நீண்டகால தாமதம் ஏற்படுகிறது.

இந்தநிலையில் அவர்களின் வாழ்க்கை துணைகள் பணியாற்றவும் தடை விதித்தால், அது தனிப்பட்ட மற்றும் பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும். அதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் திறமை வாய்ந்த தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்வதில் குறுக்கீடும் ஏற்படும்’’ என கூறி உள்ளது. இந்த உத்தரவால், எச்1பி விசா வைத்திருப்போரின் மனைவிமார்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எச்-4 விசா மூலம் அதிக பயன் அடைந்து வருபவர்கள் பெண்களே. ஒரு லட்சம் பேர் இந்த விசாவில் அமெரிக்காவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>