×

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டு நாடு முழுவதும் ஒரே நிர்வாகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: நாட்டில் உள்ள மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள்  அனைத்தையும்  நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள்  என்று  பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை   பாஜ அரசு கொண்டு வரும்  முயற்சிக்கு  திமுக தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு,  இம்முயற்சியை கைவிட வேண்டும் என்று அதன் பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பொதுக்குழு கூட்டம்  சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

பொதுக்குழுவில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி,  சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்,பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியல்  சட்டம்  1949ம் ஆண்டு  நவம்பர்  26ம்  நாள்  அரசியல்  நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 70ம்  ஆண்டு  நிறைவடையும்  நாளை நவம்பர்  26ம்  நாள்  நாடாளுமன்ற  மய்ய மண்டபத்தில்  அரசு கொண்டாடுகிறது. இந்நிகழ்வுக்கு திமுக பொதுக்குழு தனது மகிழ்ச்சியையும்  பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது முகப்புரையில் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகவே கட்டமைத்துள்ளது.

இவற்றோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கூறுகளை எப்போதும் திருத்த இயலாது என்று உச்ச நீதிமன்றத்தின் பெரு அமர்வு  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டுமென்று திமுக வலியுறுத்துவதோடு, அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்வடிப்படை பண்புகளை சிதைத்திட திமுக ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது. மாநில சுயாட்சிக்காக தலைவர் கலைஞர் அமைத்த இராசமன்னார் குழுவில் தமிழ்நாடு அரசின் கருத்துரையாக” உண்மையான கூட்டாட்சி அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தொடர்புகள்,

நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம்  இருக்க வேண்டும்;  ஏனைய அதிகாரங்கள் அனைத்தும்  எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங்களிடம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை இப்பொதுக் குழு மீண்டும் நினைவுகூர்கிறது. பாஜகவின் வழிகாட்டியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நோக்கமான மாநிலங்கள், மாவட்டப் பிரிவுகள் அனைத்தையும்  நீக்கி விட்டு இந்தியா முழுவதும் 200 ஜன்பத்கள்  என்று பிரித்து ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை நோக்கி பாஜக அரசு இந்த நேரத்தில் பயணிப்பதாக செய்திகள் வந்துள்ளன.  

இந்த முறையைக் கொண்டு வர எத்தனிப்பதற்கு  திமுக தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இம்முயற்சியை கைவிட வேண்டுமென்று  மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.

* நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை கொண்டுவர வேண்டும்
*  பொதுத்துறை நிறுவனங்களும் படிப்படியாக  தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும்  இடஒதுக்கீடு செய்திட வேண்டியது கட்டாயமாகிறது. எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளில்  இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த ஏதுவாக அரசியல் சட்டப்பிரிவுகளில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து சமூகநீதியைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஏ.கே. நடராஜன் மறைவுக்கு இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: வன்னியர் சமுதாயத்தின் ஆலமரமாகத் திகழ்ந்து - அந்தச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக வன்னியர் சங்கம் துவக்கி, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஏ.கே. நடராஜன் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்னியர் சமுதாயம் சமூக, கல்வி முன்னேற்றம் அடைவதற்குப் பெரும்பாடுபட்ட ஏ.கே. நடராஜன், அச்சமுதாயத்தில் உள்ள பல குடும்பங்களை வாழ வைத்தவர்.

தமது வாழ்வையே, சமுதாய வாழ்வுக்காகத் தியாகம் செய்து வன்னியர் குரு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், வன்னியர் சமுதாயப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : organization ,RSS ,districts ,states ,administration ,government ,DMK , DMK General Assembly, Central Government,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...