×

புல்புல் புயல் தாக்குதல்: மேற்கு வங்கத்தில் 10 பேர் பலி... 2.73 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் கரையை கடந்த புல்புல் புயலால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 10 பேர் உயிரிழந்தனர். 2.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் - வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு புல்புல் புயல் கரையை கடந்தது. முன்னதாக பகல் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக தெற்கு 24 பர்கனாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிதிகளில் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதோடு கனமழை பெய்தது.

நகரின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார ஒயர்கள் அறுந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  புயலின் காரணமாக 2,473 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 26,000 வீடுகள் பகுதியாக சேதமடைந்து உள்ளன. மீனவ நகரங்களான பக்காலி மற்றும் நம்கனா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2.73 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 1.78 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு பர்கனாஸ் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

பசிர்ஹாட் பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். பிராசர்கன்ஞ் ஹர்பாரில் மீனவரின் உடல் ஒன்று மீட்கப்பட்டது. 8 மீனவர்களை காணவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை முதல்வர் மம்தா பானர்ஜி முடுக்கி விட்டுள்ளார். இன்று ஹெலிகாப்டர் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார்.

மேற்கு வங்கத்துக்கு உதவி மம்தாவிடம் மோடி உறுதி
புல்புல் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘புல்புல் புயல் கரையை கடந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் கேட்டறிந்தேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்துள்ளேன். ஒவ்வொருவரின் பாதுகாப்பு மற்றும் நலமுடன் இருப்பதற்காக ஆண்டனை பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் 21 லட்சம் பேர் வெளியேற்றம்
புல்புல் புயல் வங்கதேசத்தில் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. நேற்று முன்தினம் தாழ்வான பகுதிகளில் வசித்த 21 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். பலர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். பல ஏக்கரில் இருந்த பயிர்கள் புயல், மழையால் நாசமடைந்தது.

Tags : storm ,West Bengal , Bulbul storm, kills
× RELATED புயல் எச்சரிக்கையால் புயல் காப்பகங்கள், பள்ளிகூடங்கள் ஆய்வு