×

ஆட்சி அமைக்க பாஜ மறுத்து விட்டதால் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு

* இன்றிரவு 7.30 மணி வரை கெடு * மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து பரபரப்பு

மும்பை: ஆளுநர் அழைப்பு விடுத்த போதிலும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது இல்லை என்று பா.ஜ திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் ஆட்சியமைக்கவேண்டிய நெருக்கடிக்கு சிவசேனா தள்ளப்பட்டுள்ளது.  சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் இன்றிரவு 7.30 வரை கெடு விதித்துள்ளார்.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக புதிய அரசு  அமையவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் பா.ஜ உடன்பட மறுத்து விட்டது. இந்த மோதலை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதல்வராக செயல்படுமாறு அவரை மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக்  கொண்டார்.

இந்த நிலையில், தற்போதைய 13வது மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுள் காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்குவந்தது. அதுவரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரவில்லை. அதையடுத்து காலையில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். மாலையில் மாநில அரசின்  அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியை ஆளுநர் ராஜ்பவனுக்கு அழைத்தார். அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனால் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்  என்ற பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆளுநர் நேற்றுமுன்தினம் இரவு பா.ஜவிடம், ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா? ஆட்சி அமைக்க முடியுமா? என்று கேட்டு கடிதம் அனுப்பினார். பா.ஜ சட்டசபை கட்சித் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேவேந்திர பட்நவிசுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது.இது பற்றி முடிவு எடுப்பதற்காக மாநில பா.ஜவின் உயர்மட்ட கமிட்டி நேற்று கூடியது. இதில் காபந்து முதல்வர் பட்நவிஸ், மாநில பா.ஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காலையில் 11  மணிக்கு கூடிய இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உயர்மட்ட கமிட்டி மாலை 4 மணிக்கு மீண்டும் கூடியது. புதிய அரசு அமைப்பதில் சிவசேனா ஒத்துழைக்காததால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை  என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல்வர் பட்நவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து இந்த முடிவை தெரிவித்தார். பாஜ ஆட்சியைமைக்க மறுத்துவிட்டதால் சிவசேனா ஆட்சியமைக்கவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. சிவசேனா தலைமையில் அமைய இருக்கும் அரசுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு செய்ய இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களும் புதிய அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் கட்சியின் மேலிடத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.பாஜ மறுத்ததால் அடுத்தகட்டமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் நேற்று மாலை அழைப்பு விடுத்தார். சிவசேனா தயார் என்றால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமெனவும் அவர் கெடு விதித்துள்ளார்.  சிவசேனா, பாஜ அல்லாத கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமெனில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். இந்த அடுத்தடுத்த திருப்புமுனைகளால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சிவசேனாவுக்கு பாஜ வாழ்த்து
ஆளுநரை சந்தித்த பிறகு ராஜ்பவனுக்கு வெளியே நிருபர்களை சந்தித்தபோது பாஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ‘‘மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க சிவசேனா ஒத்துழைக்காததால் நாங்கள் ஆட்சி அமைக்கப்போவதில்லை. நடந்து  முடிந்த தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா  கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் சிவசேனா மக்களின் தீர்ப்பை  அவமதித்து விட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா  ஆட்சி அமைப்பதாக இருந்தால்  அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.



Tags : Shiv Sena ,Governor ,Baja , Baja's refusal, rule, Governor, Shiv Sena
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை