×

மகாராஷ்டிரா அரசியலில் மற்றொரு திருப்பம்: ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 2வது தனிப்பெரும் கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைக்க இயலாது என்று பா.ஜ.க. தெரிவித்த நிலையில் சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை விட, கூடுதலாக 16 இடங்களை பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்தவிட்டபோதும், முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் தொடர் பிடிவாதம் காரணமாக, பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சியமைக்க முடியவில்லை.

மகாராஷ்டிராவின் 13ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம், சனிக்கிழமையுடன் முடிந்துபோனது. இருப்பினும், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேரவையில் அதிக இடங்களை பெற்றுள்ள தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க முடியுமா என்று கேட்டு இருந்தார். இதையடுத்து, ஒருபுறத்தில், சிவசேனா தலைவரை சந்திக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், மறுபுறத்தில், பாஜக எம்எல்ஏக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளுடன், மாலை 4 மணியளவில், தேவேந்திர ஃபத்னாவிஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, மாலை 5.55 மணியளவில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, பாஜக நிர்வாகிகளுடன் சென்று, தேவேந்திர ஃபத்னாவிஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை அடுத்து பேசிய மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிராவில் இம்முறை பாஜக ஆட்சியமைக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

பிரம்மாண்ட கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றிப் பெற்ற போதும், பாஜகவுடன் இணைந்து பயணிக்க, சிவசேனா விரும்பவில்லை என்றும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு, சிவசேனா, துரோகம் இழைத்துவிட்டதாகவும் சந்திரகாந்த் குற்றம்சாட்டினார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க விருப்பமா என ஆளுநர் மாளிகை கேட்டுள்ளது. 56 இடங்களைக் கைப்பற்றிய 2வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. ஆளுநர் அழைப்பை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநரின் அடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Maharashtra ,Governor ,government ,Shiv Sena , Maharashtra, twist, rule, Shiv Sena, governor
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...