×

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு 1800 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயிலில் வருகை: லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டது

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்க 1800 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் இந்த மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்கும். இதன் மூலம் இரு மாவட்டங்களின் நீர் இருப்பு ஆதாரமான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு பாபநாசம் அணை திறந்து விடப்படும். அக்டோபர் மாதம் நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகள், நவம்பர் மாதத்தில் நாற்று நட்டு பிசான பருவ நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபடுவர்.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும். இந்த சாகுபடிகளுக்கு யூரியா உரம் அடியுரமாக பயன்படுத்தப்படும். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் உரம் வாங்குவதற்காக விவசாயிகள் இரவு, பகலாக காத்துக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் யூரியா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையை ஈடுகட்ட சென்னையில் இருந்துதான் யூரியா உரம் வாங்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் யூரியா உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எம்எப்எல் உர நிறுவனத்தில் இருந்து 1800 டன் யூரியா உர மூட்டைகள் சென்னையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் நெல்லை மாவட்டத்திற்கு 800 டன்னும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 600 டன்னும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 400 டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளுக்கு வழங்கப்பட்டு உரம் விநியோகம் செய்யப்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவிநியோகத்திற்கு 2,600 டன் கோதுமை
மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து 2,600 டன் கோதுமை மூட்டைகள், ரயிலில் நேற்று நெல்லை வந்தது. இங்குள்ள குட்ஷெட் பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயிலில் இருந்து கோதுமை மூட்டைகள், 140 லாரிகளில் ஏற்றப்பட்டு முத்தூரில் உள்ள அரசு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags : Arrival ,districts ,Thoothukudi ,Kumari ,Paddy ,Nellai ,Kumari Districts , 1800 MT , Urea Fertilizer Thoothukudi , Kumari Districts
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 மணி...