×

கர்நாடகாவில் மழை எதிரொலி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை

மேட்டூர்: கர்நாடகாவில் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று விநாடிக்கு 10,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையும் அதேநிலையில் நீடிக்கிறது.

அதேவேளையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகளவில் உள்ளதால், நீர்மட்டம் 119.13 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 92.08 டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல்லுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக, நீர்வரத்து குறைந்திருந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 5ம் தேதி அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது.


Tags : Karnataka ,Rainfall ,Okenakkal , Karnataka, Okenakkal waterway, increase, gift run, ban
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!