×

நகருக்குள் வர மறுக்கும் டவுன் பஸ்கள்: மானாமதுரை மக்கள் கடும் அவதி

மானாமதுரை: மானாமதுரை நகர் மத்தியில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் கடந்த சில நாட்களாக நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக செல்வதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மானாமதுரை மேல்கரை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் முன்பு பஸ் ஸ்டாண்டு இருந்தது. ராமேஸ்வரத்திற்கு பாம்பன் பாலம் அமைக்கப்பட்ட பின் பஸ் போக்குவரத்து அதிகரித்ததால் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பைபாஸ் ரோட்டில் 2001ம் ஆண்டு புது பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டது. மானாமதுரை மேல்கரையில் ஆனந்தவல்லியம்மன்கோயில் தெற்கு ரதவீதி, மரக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும், ஜவுளிகடைகள், மருந்துக்கடைகள், மளிகைகடைகள், மரம், கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ள பகுதியாக மேல்கரை இருப்பதால் புது பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்ட பின்னும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையின்படி சிவகங்கை, இளையான்குடி மார்க்கமாக இயக்கப்படும் டவுன் பஸ்கள் நகருக்குள் வந்து சென்றன. தினமும் காலை ஆறு மணிமுதல் இரவு 9 மணி வரை அண்ணாசிலையில் இருந்து தெற்குரதவீதி, மரக்கடை வீதி வழியாக பழைய பஸ் ஸ்டாண்டு சென்று அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்டு செல்வது வழக்கம்.

மீண்டும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்டு, அண்ணாசிலை வழியாக வைகை மேம்பாலத்தை கடந்து சிவகங்கைக்கோ, இளையான்குடிக்கோ டவுன் பஸ்கள் செல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன் உச்சமகாளியம்மன் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட கடையின் படிக்கட்டுகள் கழிவுநீர் கால்வாயின் மேல் அமைக்கப்பட்டது. அதனால் அப்பகுதியில் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அடிக்கடி நகருக்குள் வராமல்  அண்ணாசிலை பஸ்ஸ்டாப்,  பைபாஸ்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு செல்வதும், பைபாஸ்ரோட்டில் ஆட்களை ஏற்றி செல்வதுமாக இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இது குறித்து குமார் கூறுகையில்,‘‘காலையில் தெ. புதுக்கோட்டை, இளையான்குடி, கீழப்பிடாவூர் செல்லும் டவுன் பஸ்கள் நகருக்குள் வருவதில்லை. அதே போல மாலை நேரத்திலும் பல டவுன் பஸ்கள் நகருக்குள் வராமல் அண்ணாசிலை, ஆனந்தபுரம் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகளுக்கு அலைச்சலும், பணமும் விரயமாகிறது. மேலும் வயதான, உடல்நலக்குறைவாக உள்ள முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். அதே போல திருப்புவனம் மார்க்கத்திலும் இயக்கப்படும் பஸ்களும் நகருக்குள் வரமறுக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள்,  பயணிகள் அண்ணாசிலை, ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி நகருக்குள் வர மற்றொரு ஆட்டோவை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அண்ணாசிலை வழியாக நகருக்குள் டவுன்பஸ்களை இயக்க தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட போக்குவரத்து நெரிசலை நீக்கி டவுன் பஸ்கள் நகருக்குள் வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : town ,Manamadurai , Town buses, Manamadurai, Avadi
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது