×

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது: கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. திமுக பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இதில் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. திமுகவில் நிர்வாகிகளைச் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான எந்த உத்தரவையும் பொதுச் செயலாளர் மட்டுமே பிறப்பிக்க முடியும். மேலும், பொதுக்குழு, செயற்குழு கூடுவது குறித்து பொதுச் செயலாளர் மட்டுமே அறிவிப்பார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வருகிறார்.

வயது மூப்பு மற்றும் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. இனி, திமுக நிர்வாகிகள் சேர்க்கை, நீக்கம் தொடர்பான அறிக்கைகளில் ஸ்டாலின் கையெழுத்திடலாம். இதற்கேற்ப திமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரின் முக்கிய அதிகாரங்கள் தலைவருக்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி திமுக தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் தலைவர் ஸ்டாலின் மூலமாகவே அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Tags : Stalin ,DMK ,general secretary , DMK, General Secretary K.Anabhagan, Stalin, General Committee Meeting
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் சோதனை