×

பாதை மாறும் இளைஞர்கள்...கல்லா கட்டும் போலீசார்...கள்ளச்சாராய ஊற்றான கல்வராயன் மலைகிராமங்கள்...அவலங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஆத்தூர்: சேலம் மாவட்டத்தின் கிழக்கு நுழைவு வாயில் பகுதியான தலைவாசலில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் பெரண்டூர், சேவூர் கல்லூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வந்தது. இந்நிலையில் கடும் வறட்சி ஏற்பட்டதால், விவசாயம் பொய்த்து போனது. இதனால் ெசய்வதறியாமல் திகைத்த விவசாயிகளை குறி வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் துவங்கியது தான், கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில்.  
வழக்கமாகவே உள்ளூர் திருவிழா மற்றும் உடல் அசதிக்காக, ஒரு சிலர் இயற்கை சாராயம் காய்ச்சுவது வழக்கம். இதையே கொஞ்சம் பெரிதாக்கினால் வருமானம் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்ய ஒரு கும்பல் இங்கே உள்ளது. இதனால் தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவது கல்வராயன் மலைகிராமங்களின் பிரதான தொழிலாக மாறி நிற்கிறது.

மலை கிராம மக்களால் தினசரி உற்பத்தி செய்யப்படும் சாராயம் மலைப்பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்களில் டயர்டியூப்கள் மூலம் லிட்டர் கணக்கில் எடுத்து வரப்படுகிறது. இதையடுத்து மலைப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள ஏஜென்ட்டுகளிடம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சின்ன சின்ன பாக்கெட்களில் அடைக்கப்பட்டு தலைவாசல், ஆத்தூர், வீரகனூர், உள்ளிட்ட சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும், நைனார்பாளையம், வேப்பூர் உள்ளிட்ட கடலூர் மாவட்ட கிராமங்களுக்கும் தம்மம்பட்டி வழியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் தினசரி சப்ளை செய்யப்படுகிறது. மலைகிராமங்களில் காய்ச்சப்படும் சாராயம், இருசக்கர வாகனங்களின் மூலம் தினசரி மலைகிராம இளைஞர்களால் எடுத்து வரப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் உள்ள வனத்துறையினர், காவல் துறை மற்றும் மதுவிலக்கு அமுலாக்க காவல் துறை, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு மாதம், வார என்று மாமூல் கொடுக்கப்படுகிறது. இதனால் எந்த இடையூறும் இல்லாமல் கள்ளச்சாராய கடத்தல் கனஜோராக நடக்கிறது. மலைகிராமங்களிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகள் சாராயம் காய்ச்சுவதற்கு உகந்த இடமாக இருக்கிறது. இதனால் மலைகிராம இளைஞர்களையும், மக்களையும் பெரிய அளவில் பயன்படுத்தி சாராய வியாபாரிகள் தங்களின் தேவைக்கு சாராயத்தை காய்ச்சி, விற்பனை செய்து வளத்தில் கொழிக்கின்றனர். மலைகிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் சாராயம் காய்ச்சுவதற்காக மூலப்பொருட்கள் அங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதையடுத்து சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தலைவாசல் பகுதியில் கல்வராயன் மலையை ஒட்டியுள்ள சிறுவாச்சூர், ஊனத்தூர் வழியாக மணிவிழுந்தான், சார்வாய், சாத்தப்பாடி, வீரகனூர் பகுதிக்கு கடத்தி வரப்பட்டு பின்னர் அங்கிருந்து திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், நாமக்கல் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மலைகிராமப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சாராயத்தை தடுக்க வனத்துறை, காவல் துறை, வருவாய்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம், சேலம் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்தபோது ஒரளவு சாராய உற்பத்தி தடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் கூட்டு நடவடிக்கை தொடராததால் தற்போது மலைகிராம மக்கள் மீண்டும் சாராய உற்பத்தியில் பெரும் அளவில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

 மேலும் அரசு மதுபானக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அயல்நாட்டு மதுபானங்களில் போதிய அளவு திருப்தியடையாத மதுபிரியர்கள் சாராயத்தை அதிகளவில் நாட துவங்கியுள்ளனர். இதனால் தற்போது இது, பெரும் வியாபாரமாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலான மக்கள், விவசாயத்தின் பக்கம் கவனத்தை திருப்பாமல் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிக்ேக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். எதிர்கால அபாயங்களை உணராமல், இவர்களின் பயணம் திசை மாறிக் கொண்டிருக்கிறது. எனவே இளைஞர்களை பாதை மாற்றும் சாராய உற்பத்தியை தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் சாராய விற்பனையை துவக்கிட வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் மலை கிராமப்புறங்களில் உள்ள வனப்பகுதியில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தடுக்கப்படும் என்பது மலைவாழ் மக்கள் நலஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அனைத்து துறையும் கல்லா கட்டுதுங்கோ உள்ளூர் மக்கள் ‘திடுக்’ :

‘‘கல்வராயன்  மலைப் பகுதியில் உள்ள வனத்துறையினர் வாரம்தோறும்  சாராயம் காய்ச்சும் கிராமவாசிகளிடம், அடுப்பு ஒன்றுக்கு ரூ.1000 பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். அதேபோல கலால் போலீசாருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3000 முதல்  ரூ.5000 வரை வழங்கப்படுகிறது. உள்ளூர் போலீசார் மாதாமாதம் உற்பத்தி மற்றும்  விற்பனைக்கு என ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வசூல் செய்கிறார்கள்.  வருவாய்த்  துறையினரும் தங்களுடைய பகுதியிலுள்ள சாராய உற்பத்தியாளர்களிடம் மாதம் ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு, கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால்  கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடக்கிறது,’’ என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

தொழில்நுட்ப பயிற்சியும் விழிப்புணர்வும் அவசியம்  சமூக ஆர்வலர் ஆதங்கம்

சமூக ஆர்வலர் சிவகுமார் கூறுகையில், ‘‘மலை கிராம இளைஞர்கள் அதிக அளவில் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் சிக்கி தங்களின் இளம் வயதிலேயே சீரழிந்து, சிறை வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயம் மேம்பாடாதால் தான், மலை கிராம இளைஞர்கள் மற்றும் மலை வாழ் குடிமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவே மலைகிராம இளைஞர்களின் மேம்பாட்டிற்காக அரசுத்துறையினர் அதிக அக்கறை எடுத்து மலை கிராமங்களில் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அதிக அளவில் செய்ய வேண்டும்,’’ என்றார்.

மூளை சலவை செய்யும் ஏஜெண்டுகளால் அபத்தம் மேம்பாட்டு நிர்வாகி வருத்தம்

மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் பெண் குழந்தைகள் உரிமை கழக பொறுப்பாளர் ராமு கூறுகையில், ‘‘மலை கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகமும், வருவாய்துறையும் சரிவரச் செய்வதில்லை. இதனால் மலைகிராம இளைஞர்கள் தங்களின்  தேவைக்காகவும் குடும்ப தேவைக்காகவும், பண தேவைக்காகவும் சாராய உற்பத்தி  தொழிலில் ஈடுபடுகிறார்கள். மேலும் மலை கிராமங்களில் ஏஜென்ட்டுகள் சிலர் வலம் வந்து  இளைஞர்களை மூளை சலவை செய்து  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.  காவல் துறைக்கு மாமூல் போவதால் அவர்கள் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. எனவே அவலங்களை தடுக்க வருவாய்துறையும், காவல்துறையும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

குடிசைத் தொழிலாக மாறி வரும் அவலம்  கிராம ஆர்வலர் வேதனை

கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், ‘‘கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. சாராயத்தை ஒழிக்க வேண்டியவர்கள் பணம் பெற்றுக் கொள்வதால், அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும் துறை ரீதியான ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர கிடைப்பதில்லை. இதனால் சாராய உற்பத்திக்கு சரிவேயில்லை. இதனால் மலை கிராம இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் தொழிலாக இதை கருதுகின்றனர். இதனால் அவர்களுடைய வாழ்வு சீரழிக்கப்படுவதோடு ஏனைய கிராமப்புற இளைஞர்கள் வாழ்வும் நிர்க்கதியாகிறது. எனவே இதனை தடுக்க, சாராய  உற்பத்தியால் ஏற்படும் தீமைகளையும் அவர்கள் அறிய செய்திட வேண்டும்,’’ என்றார்.


Tags : policemen , The young people who change the path ... the policemen who build the stone ...
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு