×

திண்டிவனம்: செஞ்சி: தி.மலை...புதிய ரயில் பாதை திட்டம் திடீர் ரத்து

விழுப்புரம்: நீண்ட இழுபறிகளுக்கிடையே நடந்து வந்த திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை ரயில்பாதை திட்டம் திடீரென்று ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரயில்திட்டங்களில் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட திட்டங்கள் இல்லாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அளவில் தமிழகம், கேரளாவை உள்ளடக்கி முதன் முறையாக உருவாக்கப்பட்ட ரயில்வே மண்டலம் தெற்கு ரயில்வே மண்டலம்தான்.  இது 1951ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத மண்டலமாக இருப்பது தெற்கு ரயில்வேதான்.

 இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே வேளையில் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ.1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தெற்கு ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடான ரூ.2932.61 கோடியை விட ரூ.34.28 கோடி குறைவாக ரூ.2,898.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்டவாளங்களை புதுப்பிக்க ரூ.917 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், புதுச்சேரி ஆகியவற்றையும் தலைநகர் சென்னையையும் ஒன்றிணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரையோர ரயில்பாதை அமைக்கும் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தின் கீழ் சென்னை மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான 77 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் நகரி வரையிலான 179 கிலோமீட்டர் பாதை ஆகிய ரயில் தடங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு இடையே ரயில் பாதை அமைக்க 77 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.220 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்காக முதல் கட்டமாக பாலம் கட்ட ரூ.10 கோடி நிதியை ரயில்வே துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான பணியை தொடங்க செஞ்சியில் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அடிக்கல் நாட்டினர்.

 பின்னர் இதற்காக சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஊரணி தாங்கல் பகுதியில் 140 மீட்டர் பாலம் தொண்டி ஆற்றில் 65 மீட்டர் பாலமும் வராகநதி ஆற்றின் மீது 65 மீட்டர் பாலமும் திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சல் ஆற்றின் மீது 50 மீட்டர் பாலமும் கட்டிமுடிக்கப்பட்டது அதற்கு அடுத்த கட்டமாக 2011ம் ஆண்டு ரூ 20 கோடி நிதி ஒதுக்கி நிலம் கையகப்படுத்த உத்தரவிட்டிருந்தது. இதனை செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் செயல்படுத்தாமல் காலம் கடத்தி வந்தது. அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டிய பணி நிறைவேறாமல் கிடப்பில் கிடந்தது.

தற்போது இத்திட்டம் தொடர வேண்டுமானால் 3 மடங்கு நிதி தேவைப்படுவதால் இத்திட்டத்தை மத்திய ரயில்வே வாரியம், தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு இத்திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது. இது போன்று திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட தமிழகத்திற்கு 5 ரயில்வே திட்டங்கள் ரத்தானது குறிப்பிடத்தக்கது.இந்த அறிவிப்பு செஞ்சி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செஞ்சி அருகே ரயில் நிலையம் அமைய உள்ள இடத்திற்கு அருகில் இருந்த விளை நிலங்கள் அதிக விலைக்கு விற்று வீட்டு மனைகளாக ஆனது. செஞ்சிக்கு வந்த மத்திய அரசின் திட்டங்களான ரயில்வே திட்டம், செஞ்சிக் கோட்டையை சுற்றி பார்க்க அப்போதைய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ரோப்கார் அமைக்க ஒரு திட்டம் தீட்டி அதுவும் அமைக்க முடியாமல் நின்று போனது.

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக கிருஷ்ணகிரிக்கு 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க ரூ.550 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு அச்சாலை திண்டிவனம் வரையிலும் செயல்படுத்தப்பட்டு முடிந்து . திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக கிருஷ்ணகிரி வரையில் நான்கு வழி சாலை ரத்து செய்யப்பட்டு இரு வழி சாலையாக குறைத்து அந்த பணியும் நிறைவடையாமல் கிடப்பில் உள்ளது குறிப்பிடதக்கது. மூன்று திட்டங்களும் செயல்படுத்த முடியாமல் போனதற்கு செஞ்சி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி எளிதாக செஞ்சியில் இருந்து ஆன்மிக ஊரான திருவண்ணாமலைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ரயில்செல்லவேண்டுமானால் விழுப்புரம் வந்து அங்கிருந்து மீண்டும் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. பல ஆண்டுகள் இழுபறிக்குப்பிறகு நடந்துவந்த புதிய ரயில்பாதை திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கு சாபக்கேடா?:  இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், மன்னர்கள் ஆண்ட செஞ்சிக்கோட்டை, புரதான சின்னங்கள், கோயில்கள்  என இப்பகுதி சுற்றலாத்தளமாக விளங்கிவருகிறது. ஆனால் போக்குவரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எந்ததிட்டங்களையும் எடுக்கவில்லை. குறிப்பாக நீண்டகால கோரிக்கையான ரயில்ேவ திட்டங்கள் திடீரென்று ரத்துசெய்யப்பட்டுள்ளது. அப்போதே விறு, விறுப்பாக பணிகள் நடந்திருந்தால் இந்நேரம் எங்கள் ஊருக்கு ரயில்வந்திருக்கும். ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. சாலை, புதிய ரயில்பாதை திட்டங்கள் என அனைத்தும் அறிவித்து பின்னர் ரத்துசெய்யப்பட்டுவருவது செஞ்சியின் சாபக்கேடாக நினைக்கிறோம்.

திமுக எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்

திண்டிவனம்- செஞ்சி-  திருவண்ணாமலை புதிய ரயில்பாதை திட்டத்தினால் விழுப்புரம் மாவட்ட மக்கள்  மட்டுமின்றி புதுச்சேரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஏன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஆன்மிகம், சுற்றுலாவிற்கு செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுவார்கள். தற்போது இந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் ஒன்றாக குரல்கொடுத்து  இதனை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Tindivanam , Tindivanam: Ginger: The mountain ... New railway project abruptly canceled
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...