கும்பகோணத்தில் ரூ.50 கோடி ரிங்ரோடு பணி பாதியில் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.50 கோடியில் ரிங்ரோடு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நவகிரக தலங்களும், வழிபாட்டு கோயில்களும், புராதன கோயில்களும் அதிகம் உள்ளது. இதனால் கும்பகோணத்தை கோயில் நகரம் என்றும் அழைப்பார்கள். மேலும் கும்கோணம் பகுதியில் எவர்சில்வர், ஈயம், ஐம்பொன் சிலைகள் செய்யப்படுகிறது. குத்துவிளக்கு என ஏராளமான கைவினைப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலை, டிகிரி காப்பி மற்றும்  காப்பித்தூள், நெய்சீவல், தொன்னை, பட்டுப்புடவை தயாரிப்புகள் இருப்பதால் கும்பகோணம் ஒரு வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது.

மேலும் புகழ்பெற்ற தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு ஆடவர் கல்லூரி, அரசு கவின் கல்லூரி உள்ளது. இங்கு வெளி மாநில , மாவட்ட மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதே போல் உலக புகழ்பெற்ற  .யூனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வெளி நாடு, மாநிலத்தவர்கள் கலைகளை பற்றியும், நுட்பத்தை பற்றியும் படிப்பதற்காகவும், தெரிந்து கொள்வதற்காகவும் தினந்தோறும் நூற்றுக்கும்  மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்தின் தலைமை அலுவலகமாக அரசு மருத்துவமனை, பதிவாளர் அலுவலகம், அரசு போக்குவரத்து கழக அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றம், மூன்று  மாவட்டங்களில் உள்ள பல ஊர்களை தலைமையிடமாக கொண்ட தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தவிர அனைத்து அரசு மாவட்ட தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

கும்பகோணம் பகுதிக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர் , காரைக்கால் மாவட்டங்களிருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதே போல் வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஐம்பொன் சிலைகள் , பட்டுப்புடவைகள் உள்ளிட்டவைகள் வாங்குவதற்காக தினந்தோறும் வருவார்கள். இதனால் மாவட்டத்திலேயே அதிகமான வர்த்தக கேந்திரமாக திகழ்ந்து வருகிறது.கும்பகோணம் நகரில் மட்டும் சுமார் 2 லட்சம் பேரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் பேரும் உள்ளதால் கும்பகோணம் நகரம் எப்போதும் நெருக்கடி மிகுந்த நகரமாகவே காணப்படுகிறது. கும்பகோணம் நகர பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலை வசதிகளே இருந்து வருகின்றது.

இதனால் குறுகலாக உள்ள சாலைகளில் கும்பகோணம் நகரப்பகுதி எப்போதும் வாகனம், பொது மக்கள் நெருக்கடி நிறைந்த  பகுதியாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2004ம் ஆண்டு மகாமகத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா , கும்பகோணத்தை சுற்றிலும் சுற்று வழி்புறச்சாலை அமைக்க முடிவு செய்தார். முதல் கட்டமாக தாராசுரம், வளையப்பேட்டை, அசூர்,  கரூப்பூர், செட்டிமண்டபம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றுவழிப்பாதை (ரிங்ரோடு) அமைக்கப்பட்டது. இதனால் திருச்சி, மதுரை, கோவை மார்க்கத்திலிருந்து வரும் கார்கள், கனரக வாகனங்கள் தாராசுரம் சுற்று வழிப்பாதை வழியாக  கும்பகோணம் நகரத்திற்குள் வராமல் விழுப்புரம், மயிலாடுதுறை, சிதம்பரம், மார்க்கமாக செல்லும் ஊர்களுக்கு சென்றது.

இதே போல் சிதம்பரம், சென்னை மார்க்கமாக வரும் கார்கள், கனரக வாகனங்கள் , சுற்றுவழிப்பாதை வழியாக கும்பகோணம், தஞ்சை.திருச்சி, மார்க்கமாக செல்லும் ஊர்களுக்கு சென்றது. அதன் பின்னர் மீதமுள்ள சுற்று வழிப்பாதை பணி  முடங்கியது.

இதையடுத்து கும்பகோணத்தை சுற்றியுள்ள மீதமுள்ள அரைவட்ட பைபாஸ் ரோட்டினை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு மயிலாடுதுறை சாலை செட்டிமண்டபத்தில் இருந்து தேப்பெருமாநல்லூர், பழவாத்தான்கட்டளை, சீனிவாசநல்லூர், கிருஷ்ணாபுரம், சிவபுரம், மலையப்பநல்லூர், கருப்பூர் வழியாக திருவாரூர் சாலை கிருஷ்ணாபுரம்  வரை சுமார் ரூ50 கோடி மதிப்பில் சுமார் 4 கிமீ தூரம் செல்கிறது.

அதன் பின்னர் காரைக்கால் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள், கனரக உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் வழி மார்க்கமாக சென்றது. ஆனால் கிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலையிலிருந்து சாக்கோட்டைவழியாக தாராசுரம் வரை மீதமுள்ள பைபாஸ் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், திருவாரூர், நாகை மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள், கார்கள், கனரக  வாகனங்கள் அனைத்தும் கும்பகோணம் நகரப்பகுதிக்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன விபத்துக்களும் ஏற்பட்டுவருகிறது.

பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்திற்குள் மீதுள்ள சுற்று வழிச்சாலை பணியினை முடிக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் , என்ன காரணத்தினாலோ அப்பணி அப்படியே கிடப்பில்  போடப்பட்டது.

தற்போது சுற்றுவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் பணிகள் மந்த நிலை நடைபெறுவது வேதனையான விஷயாகும்.

போர்க்கால நடவடிக்கை தேவை:  இது குறித்து அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் கூறுகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு மகாமகத்தின் போது போக்குவரத்து நெரிசலை குறைக்கவே , கும்பகோணத்தை சுற்றிலும் சுற்றுவழி– ்சாலையை ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி , உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அடுத்த 2016 ஆம் ஆண்டு மகாமகத்தின் போது , போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்று ,சுற்று வழிச்சாலையை தொடங்கினார்.  

பின்னர் 75 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது கிருஷ்ணாபுரத்திலிருந்து சாக்கோட்டை வரை சுற்றுவழிச்சாலை போடாமல் இழுத்தடித்து வருகின்றனர். கும்பகோணம் நகரம் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.  தமிழக அரசு போர்கால அடிப்படையில் கிருஷ்ணாபுரம் தாராசுரம் சுற்றுவழிச்சாலை பணியினை தொடங்கினால் , விரைவில் சாலை அமைக்க முடியும், இல்லை என்றால் அடுத்த 2028 ஆம் ஆண்டு வரும் மகாமகத்தின் போது கூட சாலை பணி  முடியாது என்றார்.

வீண் காலதாமதம்:  இது குறித்து கும்பகோணம் நுகர்வோர் நல சங்க தலைவர் பாலாஜி கூறுகையில், கும்பகோணம் போகுகுவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக உள்ளது. தாராசுரத்திலிருந்து செட்டி மண்டபம் வரை அமைந்துள்ள புறவழிச்சாலை அமைக்கப்பட்ட  நிலையில் தென்பகுதி கிருஷ்ணாபுரத்திலிருந்து தாராசுரம் வரை சுற்றுவழிச்சாலை அமைக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அப்பாதை அமைப்பதற்கான தொகை ஒதுக்கப்பட்டிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தியும் கூட  இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் வீண் காலதாமதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த 2018 ஆம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மீதமுள்ள பைபாஸ் சாலை அமைப்பதற்கான புறவழிச்சாலையை ஆய்வு செய்தார். அதன் பின் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

2021ம் ஆண்டு முடியும்: இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், கிருஷ்ணாபுரத்திலிருந்து தாராசுரம் வரையிலில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 கிராமங்கள் உள்ளன. இதில் 5 கிராமங்களுக்கு நில தேவைப்படும். இதற்காக நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.  வளையப்பேட்டை கிராமத்திற்கு இன்னமும் பணிகள் தொடங்கவில்லை. மீதமுள்ள சாலை பணிக்கான நிதி இன்னமும் ஒதுக்க வில்லை. வரும் 2021ம் ஆண்டிற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Related Stories: