×

ஆரணி நகரில் தீராத பிரச்னை காட்சிப் பொருளாக மாறிய சிக்னல்கள்: நெரிசலில் தவிக்கும் வாகனங்கள்: தினமும் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

ஆரணி: ஆரணி நகரில் காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்களால் தினமும் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். ஆரணி பட்டு நகரம் என்றே அழைக்கப்படுகிறது. அதற்கேற்ப பட்டுநெசவுக்கு ஆரணி நகரம் பெயர் பெற்றது. இங்கு உற்பத்தியாகும் பட்டுச்சேலைகளுக்கு உலகளவிலும், உள்நாட்டிலும் மிகப்பெரிய சந்தை உண்டு.  அதேபோல்,  ஆரணி நகரிலும், சுற்றுப்புறங்களிலும் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் அரிசி வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நகரை சுற்றி கிராமங்கள் நிறைந்துள்ளதால் இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் ஆரணி நகருக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
 
இதுதவிர ஏராளமான கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலகங்களும் ஆரணியில் அமைந்துள்ளன. இதனால்  மருத்துவம், கல்வி, அரசு பணி, வர்த்தகம் என பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களால் ஆரணி நகரம் எப்போதும் நெரிசலுடனே காட்சி தரும்.
இதனால் ஆரணியில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் என்பது மக்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு அம்சமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஆரணி நகரின் பிரதான சாலையாக விளங்கும் காந்தி சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

அதிலும் காலை, மாலை நேரங்களில் காந்தி சாலை, பழைய, புதிய பேருந்து நிலையங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர்கள், அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்பவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை சுமந்து வரும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் என போக்குவரத்து நெரிசலால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.  அதேபோல் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலத்துக்காக பக்தர்களுடன் செல்லும் பஸ்கள், கார்கள், டூரிஸ்ட் வேன்கள், அமாவாசை நாட்களில் மேல்மலையனூர் செல்லும் வாகனங்கள், பண்டிகை நாட்களில் சென்னை, வெளிமாவட்டங்கள், வெளிமாநில பஸ்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆரணி வழியாகவே செல்கின்றன.

இதனால் ஆரணி காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை, திருவண்ணாமலை சாலை, தச்சூர் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசாரும் முன்வருவதில்லை.
அதேபோல் ஆரணி நகரின் போக்குவரத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களும் இயங்குவதில்லை. இதனால் பரபரப்பான நேரங்களில் காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை, அண்ணா சாலை, மணி கூண்டு எதிர் சாலை என அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நெரிசலுக்கு ஆரணி பகுதிகளில் விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்களும் காரணம். இதனால் ஆரணி நகரில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. இது ஒருபுறம் என்றால் ஓட்டுனர் உரிமம் இன்றி அதிகளவில் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருப்பதையும் காவல்துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் கண்டு கொள்வதில்லை என்ற புகாரும் ஆரணி மக்களால் எழுப்பப்படுகிறது.
எனவே காலை, மாலை நேரங்களிலும், விசேஷ நாட்களிலும் போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக விசேஷ நாட்களில் ஆரணி பஜார் வழியாக  கனரக வாகனங்கள், பஸ்களை இயக்காமல் புறவழிச்சாலையில் மாற்றிவிட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க இனிவரும் நாட்களில் டவுன் உள்ளே வாகனங்களை அனுமதிக்ககூடாது. காந்தி சாலை, பழைய பஸ் நிலைய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என ஆரணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆரணியில் கடந்த 10 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை  காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பிரதான சாலைகளான காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சாலைகளில் பூ, பழக்கடைகள், தள்ளூவண்டி கடைகள், காய்கறி கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளையும்,  பிரதான சாலைகளில் கடைகளின் எதிரில் நிறுத்தப்படும் வாகனங்கள், கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அகற்றினாலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.ஆரணியில் இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பி 10 மாதங்கள் வரை சாலைகளில், கடைகள், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்து பழைய, புதிய பேருந்து நிலையங்களில் சிக்னல்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆரணி பகுதிகளில் அமைக்கப்பட்டடுள்ள சிக்னல்கள் பழுதடைந்து காட்சி பொருளாக மாறியுள்ளன. இதுகுறித்து தற்பொழுது உள்ள டிஎஸ்பியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆரணி நகரில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து கலெக்டருக்கும், எஸ்பிக்கும் பலமுறை போனிலும், நேரிலும் சென்று புகார் தெரிவித்தும் எந்த பயனுமில்லை.

ஆரணியில் பழைய பஸ் நிலையம், காந்தி சாலை பகுதிகளில் காட்சி பொருளாக மாறியுள்ள சிக்னல்களை சீரமைத்தும், போக்குவத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தினால் நெரிசலை குறைக்கமுடியும்.ஆரணியில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பஜாருக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆரணியில் சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் சாலைகளில் லாரிகளை நிறுத்திவிட்டு பொருட்களை இறக்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறன்றனர்.  மேலும் காவல்துறையினரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வாகனங்கள் மீது வழக்கு பதிவதில்லை. ஆரணியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கனரக வாகனங்கள் டவுன் பகுதிகளுக்கு வராமல் இருக்கவும் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் இருந்த ஆரணி ஹவுசிங் போர்டு, வடுகசாத்து வழியாக சேத்துப்பட்டு, விழுப்புரம் புறவழிச்சாலைகளை இணைக்க வேண்டும்.

மேலும் ஆரணி நகரில் நீண்டதூரம் செல்லும் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் வராமல் சுற்றி செல்லும் வகையில் ரிங் ரோடு, மேம்பாலங்கள் அமைத்தால் முற்றிலுமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து  வரும் கனரக வாகனங்கள் ஆரணி மில்லர்ஸ் சாலையில் இருந்து பையூர் சாலை வழியாக திருப்பிவிட வேண்டும். எஸ்பி பொறுப்பு பிரவேஷ்குமார் கூறியதாவது: நான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்சார்ஜ்தான் பார்த்து வருகிறேன். அது சம்மந்தாக  எனக்கு தெரியாது. இதுசம்மந்தமாக விசாரித்து தகவல் கொடுக்கிறேன். டவுன் பகுதிகளில் கனரக வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை. அதுபோல்  கனரக வாகனங்களால் ஆரணியில் அந்த பிரச்னைகள் இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : civilians ,Public ,Arani City , Signals that have become a major problem in Arani City: Traffic Vehicles: Public
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...