×

அயோத்தி வழக்கு தீர்ப்பு முழு விவரம்: 2.77 ஏக்கர் நிலம் அரசுக்கே சொந்தம்

அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பின் முழு விவரம் வருமாறு: மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதன்படியே உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம், இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது.

அமைதியை காக்கவும், பாதுகாப்பினை பராமரிக்கவும் ஏற்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த தீர்ப்பை நடுநிலையுடன் நீதிமன்றம் அணுகும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா வக்பு வாரியம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், அந்த நிலம் ஷியா வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது அல்ல. அது வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, அரசுக்குச் சொந்தமானது என்பதால் ஷியா வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பாபர் மசூதியானது, பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்கவில்லை.

அதே சமயம், கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்துக்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது. ஆங்கிலேயேர் ஆட்சி வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி உள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.

பாபர் மசூதியானது, பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல. வெறும் கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக மட்டும் அந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது. இந்த வழக்கில், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. அதேசமயம், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியின் கீழ்பகுதியில் இருக்கும் கட்டிடம் முஸ்லிம்களின் கட்டிடமும் அல்ல. கோயில் இடிக்கப்பட்டுதான் கட்டப்பட்டதா? என்றும் கூற முடியாது. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு மதத்தினரின் நம்பிக்கையை, மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்ட சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். அயோத்தியா சட்டம் 1993-ன் கீழ் அடுத்த 3 மாத காலத்துக்குள் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதற்காக தனியாக அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தி, கோயிலைக் கட்ட வேண்டும். கோயிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகியவற்றை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு. எனவே, முஸ்லிம்களுக்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலம் அவர்கள் கேட்கும் சரியான இடத்தில் வழங்க வேண்டும். அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு. அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். இவ்வாறு தீர்ப்பு அளித்தனர்.

1045 பக்கம் தீர்ப்பு:
* தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
* தலைமை நீதிபதி தீர்ப்பை நேற்று காலை 10.30.க்கு வாசிக்கத் தொடங்கினார். தீர்ப்பு முழுவதையும் வாசித்து முடிக்க 45 நிமிடங்கள் ஆனது.
* தீர்ப்பின் மொத்த பக்கங்கள் 1045.
* ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்ப்பு அளித்தனர்.

Tags : government , Ayodhya case, verdict, full description, 2.77 acres of land, state, owned
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...