×

பேரிடர் அபாயத்தில் 4,160 கிராமங்கள்: திறன் பெற்ற மீட்பு குழு அமைக்க கோரிக்கை

கோவை: தமிழகத்தில் 4,160 கிராமங்கள் பேரிடர் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 33 மாவட்டத்தில் 86 வருவாய் கோட்டத்தில், 16,682 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் மலை, கடல் சார்ந்த மாவட்ட கிராமங்களில் புயல், மழை, வெள்ளம், வறட்சி, சூறாவளி அபாயம் இருக்கிறது. மாநில அளவில், நடப்பாண்டில் 4,160 கிராமங்களுக்கு பேரிடர் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் காற்று, மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. நீர்தேக்கங்களில் சுமார் 1 லட்சம் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. பூகம்ப அபாயத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. அபாய பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் வீடுகளை அகற்ற பல ஆண்டுகளாக எந்த முயற்சியும் நடக்கவில்லை.

இது பற்றி பேரிடர் மீட்பு துறையினர் கூறுகையில், ‘‘மழை பெய்யும்முன்பே அபாய வீடுகளை காலி செய்யவேண்டும். மழை வெள்ளம் வந்த பின்னரும் அங்கேயே தங்கியிருக்கும் நபர்கள் அபாயத்தில் சிக்குகிறார்கள். குளம், குட்டை, வாய்க்கால் நீர் புகுந்தாலும் வீடுகளை விட்டு செல்ல மக்கள் தயங்கும் நிலையிருக்கிறது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுவதால் பாதிப்பு அதிகமாகி விடுகிறது. தாழ்வான பகுதியில் உள்ள நீரை நீர்த்தேக்கங்களுக்கு திருப்பி விடவேண்டும். வடிகால் இல்லாத பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மக்களை எச்சரித்து வெளியேற்றினால் மட்டுமே இயற்கை சீற்ற பாதிப்பை தவிர்க்க முடியும். பயிர் பாதிப்புகளை தடுக்க, அபாய பகுதியில் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கவேண்டியுள்ளது’’ என்றனர்.

இயற்கை சீற்றங்களை சமாளிக்க மாவட்டம் வாரியாக வருவாய்த்துறையில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் மீட்பு மையங்கள் தொலைபேசி இணைப்புகூட இல்லாத செயல்படாத மையமாக இருக்கின்றன என புகார் எழுந்துள்ளது. பேரிடரை சமாளிக்க திறன் பெற்ற மீட்பு குழு மாவட்ட, மாநில அளவில் இதுவரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நீச்சல் தெரிந்த, மீட்பு திறன் பயிற்சி பெற்ற வீரர்கள் கொண்ட மீட்பு படையை உருவாக்காமல் தீயணைப்பு துறையை மட்டும் நம்பி வருவாய்த்துறையினர் காலம் கடத்தி வருகின்றனர். வரும் காலங்களில் பேரிடர்களை சமாளிக்க இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உச்சத்தில் புயல் காற்று:
தமிழகம் கியாந்த், நாடா, வர்த்தா, ஒக்கி போன்ற புயல்களை சந்தித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏதாவது புயல் வந்து வலு இழந்து சென்று விடும். காற்றின் வேகம் குறையும் போது வலு இழக்கிறது. ஆனால் பலமான காற்றுடன் மழை பெய்தால் உச்ச கட்ட பாதிப்பு ஏற்படும். ஒக்கி புயல் 85 கி.மீ வேகத்திலும், வர்த்தா 79 கி.மீ வேகத்திலும் வீசியது. கியாந்த் புயல் 155 கி.மீ வேகத்தில் வீசி சென்றது. வரும் காலத்தில் புயல் காற்றின் வேகம் 200 கி.மீ வேகத்தை எட்டும் அபாயம் இருப்பதாக வானிலைத்துறை எச்சரித்துள்ளது. காற்று வீச்சு தான் மரம், கட்டடங்களை சாய்த்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் புயலை தாங்கும் வகையிலான கட்டுமானங்கள் அமைக்கப்படவில்லை. உயிர், உடைமை சேதங்களை தடுக்க பேரிடர் மீட்பு திட்டம் உருவாக்கவேண்டியுள்ளது.

Tags : villages ,disaster ,rescue team , Disaster Risk, 4,160 Villages, Skilled, Rescue Team, set up
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை