×

அரசின் திட்டம் வீணாகும் நிலை குற்றவாளிகள் விபரங்கள் பதிவு செய்வதில் சிசிடிஎன்எஸ் பிரிவில் முறைகேடு: பணம் கொடுத்து வழக்குகளை மறைத்து தப்பும் ஆசாமிகள்

நாகர்கோவில்: தமிழகத்தில் காவல்துறையின் சிசிடிஎன்எஸ் திட்டத்தில் குற்றவாளிகள் பதிவுகள் சரிவர பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் துறையில் சிசிடிஎன்எஸ் எனப்படும், கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பெருங்குடியில் இதன் தலைமையகம் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் ‘வைட் ஏரியா நெட்வொர்க்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

எல்லா காவல் நிலையங்களிலும் பராமரிக்கப்பட்டு வரும் குற்ற ஆவணங்கள் மற்றும் எப்.ஐ.ஆர். அனைத்தையும் இந்தியாவின் எந்த மூலையில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு பெறும் விதமாக இந்த நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையின் பிரத்யேக சாப்ட்வேரான சிப்ரஸ் (காமன் இன்டக்ரேடட் போலீஸ் ரெக்கார்ட் அப்டேட்டிங் சிஸ்டம்) தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசாருக்கு தனியாக கம்ப்யூட்டர் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிஎன்எஸ் திட்டம் தேசிய அளவில் ஒருங்கிணைந்த உள் கட்டமைப்புகளை உருவாக்கி காவல் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாகும். தமிழகத்தில் உள்ள 1,485 காவல் நிலையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கு விவரங்கள், குற்றவாளிகளின் ‘டேட்டா’ விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாநில தகவல் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்படும்.  

குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் போது, போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம் இன்னும் பிற சேவைகளுக்காக சம்பந்தப்பட்ட நபர் தொடர்பு கொள்ளும் போது சிசிடிஎன்எஸ் பிரிவில் அந்த நபர் பற்றிய விவரத்தை துல்லியமாக எடுத்து விடுவார்கள். ஆனால் சமீப காலமாக குற்ற பதிவுகள் செய்வதில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில் குற்றவாளிகளின் விபரங்களை, அந்த பிரிவில் உள்ள போலீசார் சிலர் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விடுவது அல்லது பெயரில் ஆங்கிலத்தில் டைப் செய்யும் போது ஏதாவது எழுத்துக்களை மாற்றி பதிவிடுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த நபர், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே, காவல்துறை பணிக்கு சேர்ந்துள்ளார். சில ஆண்டுகள் பணியாற்றிய பின் சமீபத்தில் தான் இவர் மோசடியாக பணிக்கு சேர்ந்த விவரம் தெரிய வந்தது. அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து தற்போது துறை ரீதியான விசாரணை நடக்கிறது. இந்த மோசடி முழுக்க, முழுக்க சிசிடிஎன்எஸ் பிரிவில் தான் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதை மறைத்து போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
 இதற்கு குமரி மாவட்ட சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றிய சிலர் உதவி புரிந்துள்ளனர். இது போன்ற மோசடிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

காவல் துறையில் அதிகாரிகள் சிலர் இந்த மோசடி தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளை கூட சிசிடிஎன்எஸ் பதிவில் ஏற்றாமல் இருப்பதால், அவர்கள் வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளுக்கு தப்பி சென்று இருக்கிறார்கள். சிசிடிஎன்எஸ் திட்டத்துக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் ஒரு சிலரின் தவறால் திட்டத்தின் நோக்கம் தவறாக மாறுகிறது. எனவே சிசிடிஎன்எஸ் பிரிவை பலப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து 2, 3 ஆண்டுகளுக்கு மேல் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றி வரும் நபர்களை, காவல்துறையின் மற்ற பணிகளுக்கு அனுப்பி விட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி , சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். சிசிடிஎன்எஸ் பிரிவு முறைகேடு நடந்துள்ளதா? எத்தனை குற்றவாளிகளின் பதிவுகள் மறைக்கப்பட்டு உள்ளன என்பதை காவல்துறை தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.


Tags : CCDNS Division in Criminal Misuse , Government Plan, Wasting Status, Registration of Offenders, CCDNS Section
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி