×

தமிழகம் முழுவதும் ரூ.2,600 தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 66 ஆயிரம் தூய்மை காவலர்கள்: இவர்கள் வாழ்வில் மணம் வீசுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

கலசபாக்கம்: தமிழகம் முழுவதும் 2,600 தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 66,025 தூய்மை காவலர்களின் வாழ்வில் மணம் வீசுவது எப்போது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் 66 ஆயிரத்து 25 தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலில் இவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முழு கூலி வழங்கப்பட்டது. 2014-15ல் ரூ.167, 2015-16ல் ரூ.183, 2016-17ல் ரூ.203, 2017-18ல் ரூ.205, மார்ச் மாதம் வரை கூலி வழங்கப்பட்டு வந்தது.

திடீரென 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.100 என கணக்கிட்டு 26 நாட்கள் வேலை நாட்களாக கணக்கிட்டு, ரூ.2,600 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் வீதி, வீதியாக கொண்டு செல்லும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் வைத்து மக்கும், மக்கா குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என தனித்தனியாக பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதால் தூய்மை காவலர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2014ம் ஆண்டு ரூ.167 கூலி பெற்று வந்த இவர்களுக்கு விலைவாசியை கருத்தில் கொண்டு கூலியை உயர்த்தி வழங்காமல் நாள் ஒன்றுக்கு ரூ.100 கணக்கிட்டு வழங்குவது வேதனைக்குரியதாக உள்ளது.

தற்போது உயர்ந்துள்ள கடுமையான விலைவாசி உயர்வில் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் இவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூலி வழங்கப்படாவிட்டாலும் கூட, விடுமுறை நாட்களில் தேக்கி வைத்திருக்கும் குப்பைகளையும் முகம் சுளிக்காமல் தூய்மை காவலர்கள் அள்ளி செல்கின்றனர். எதிர்காலத்தில் பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சொற்ப ஊதியத்துக்கு துர்நாற்றம் வீசும் குப்பைகளை இரு கைகளால் அள்ளி செல்வதை பார்க்கும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது. தூய்மை காவலர்களின் நலன் கருதி இவர்களின் வாழ்வில் ஒளி வீசும் வகையில் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கொத்தமல்லி, கருவேப்பிலை கூட வாங்க முடியாது:
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ரூ.2,600 மாத தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனர். தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்போதுள்ள விலைவாசியில் ஊதியத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலை கூட வாங்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Tags : activists ,Tamil Nadu , Tamil Nadu, Rs 2,600 package, working, 66 thousand, purity guards, social activists, question
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...