×

கல்லூரி மாணவர்கள், ஐ.டி. இளைஞர்களுக்கு சப்ளை வனத்தில் மணக்கும் கஞ்சா: பணத்தில் திளைக்கும் போலீஸ்

கோவை:கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பாரப்பட்டி, தோலம்பாளையம், ஆனைமலை வன விலங்கு சரணாலயம், ஈரோடு மாவட்டத்தில் திம்பம், ஆசனூர் வனம், தேனி மாவட்டத்தில் வருஷநாடு வனம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கொல்லிமலை மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி வனத்தில் கஞ்சா சாகுபடி நடப்பதாக தெரியவந்துள்ளது. பல ஆண்டாக கஞ்சா சாகுபடி நடந்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் (என்.ஐ.பி.), வனத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் வனத்தில் கஞ்சா விதை தூவி விடும் கும்பல், 9 மாதம் காத்திருந்து வெயில் காலமான ஏப்ரல், மே மாதம் முதிர்ந்த கஞ்சா செடியை அறுவடை செய்வது வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு செடியும் 3 முதல் 7 கிலோ எடை வரை இருக்கும். செடிகளை வெட்டி காய வைத்து விதைகளை நீக்கி, பாக்கெட் செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். வெளி சந்தையில் 1 கிலோ கஞ்சா 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோவை மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா கிடைத்தும் கஞ்சா கடத்தல், விற்பனை தடுக்கப்படவில்லை. உடுமலையில் ஆம்புலன்ஸ் வேனில் 500 கிலோ எடையில் கஞ்சா பொட்டலம் கிடைத்தது. சூலூரில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக 300 கிலோ கஞ்சா கிடைத்தது. கோவை வந்த ரயிலில் 200 கிலோ கஞ்சா சிக்கியது. கோவையை சேர்ந்த நபர், கூலி ஆட்களை வைத்து நகரில் கஞ்சா சப்ளை செய்து வந்தார். இவரிடம் 200 கிலோ கஞ்சா சிக்கியது.

இவரின் கட்டுப்பாட்டில் 200 சிறு வியாபாரிகள் கஞ்சா விற்பனை செய்யும் தகவல் வெளியானது. கோவையில் கஞ்சா கிடைத்தால் வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததுபோல் கணக்கு காட்டுவது வாடிக்கையாக நடக்கிறது. குறிப்பாக விஜயவாடா, பாடகிரி மலையில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா வருவதாக போலீசார் தகவல் வெளியிட்டு வருகின்றனர். கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்ப்பது தொடர்கிறது.

கல்லூரி மாணவர்கள், ஐ.டி இளைஞர்கள் என பல தரப்பட்டவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக்கப்படுகிறார்கள். கல்லூரி மாணவர்களையே வியாபாரிகளாக மாற்றி, கஞ்சா பொட்டலங்களை கல்லூரிகளுக்கு, விடுதிகளுக்கு சப்ளை செய்வது பல ஆண்டாக நடக்கிறது. ஒரு கும்பலை கைது செய்தால், மற்றொரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கோவை நகர், புறநகரில் நடப்பாண்டில், கஞ்சா விற்பனை தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகின. இருப்பினும் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. கோவையை மையமாக கொண்டு கஞ்சா வியாபாரம் நடப்பதாக தெரியவந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் விளையும் கஞ்சா செடிகள் கோவைப்புதூர் அறிவொளி நகர், சிறுவாணி, தோலம்பாளையம், வாளையார் பகுதியில் உள்ள குடிசைகளில் குவிக்கப்பட்டு பண்டல்களாக மாற்றப்படுகிறது. முதல் ரகம், இரண்டாம் ரகம், கட்டை ரகம் என பல ரகமாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இளம் வயதினரை மயக்க கஞ்சா சாக்லெட்டும் பரவலாகி வருகிறது. போலீசார் கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக 1 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா வைத்திருந்தால், கூடுதல் தண்டனைக்கு வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, 50 கிராம், 100 கிராம் என குறைந்த அளவு கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததாக பெயரளவிற்கு வழக்கு போட்டு பணம் பார்ப்பது போலீசாரின் வாடிக்கையாகி விட்டது என புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரவுடிகள் சிலர் கஞ்சா விற்கிறார்கள். போலீசார் சிலர், கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். யாராவது புகார் தந்தால், கஞ்சா வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்து காட்டி கொடுத்து விடுகிறார்கள். போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுத்தால்தான் கஞ்சா வியாபாரத்தை தடுக்க முடியும்’’ என்றனர்.

கோவை போதை பொருள் தடுப்பு போலீசார் கூறுகையில், ‘‘கஞ்சா கடத்தல் பல வகைகளில் நடக்கிறது. வெளியூரில் இருந்து வந்து கஞ்சாவை விற்றுவிட்டு சென்று விடுகிறார்கள். அடிக்கடி இடத்தை மாற்றுகிறார்கள். வாட்ஸ் அப் குழு வைத்தும் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். கைது செய்து சிறையில் அடைத்தால் ஜாமீனில் வந்து கஞ்சா விற்கிறார்கள்’’ என்றனர்.

குற்றவாளிகள் சிக்கவில்லை:
2 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா சிக்கினால் அந்த வழக்குகள் போதை பொருள் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.பி. போலீசாரிடம் இப்படி 50க்கும் மேற்பட்ட வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் குற்றவாளிகள் சிக்கவில்லை. எந்த வனத்திலும் கடந்த 3 ஆண்டாக என்.ஐ.பி. போலீசார் ரெய்டு நடத்தவில்லை.

‘வனத்தை பாதுகாப்பது எங்கள் வேலை, கஞ்சாவை தடுப்பது போலீஸ் வேலை’ என வனத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. பெயரளவிற்குகூட கஞ்சா செடி அழிப்பு பணிகளை வனத்தில் நடத்தாமல் வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது. கஞ்சா கும்பல் மூலமாக பல லட்ச ரூபாய் வருவாய் கிடைப்பதால் போலீஸ் ரெய்டு முடங்கியிருக்கிறது.

Tags : College students ,Ganja ,youth College students , College students, IT. Youth, supply, marijuana, money laundering, police
× RELATED 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர...