×

பீடி, தீப்பெட்டி தொழிலால் குட்டி சிவகாசி என்று அழைக்கப்படுகிறது கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி சீரழியும் குடியாத்தம் நகரம்: ஓட்டம் பிடிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள்

குடியாத்தம்: குடியாத்தம் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும் தங்களின் அவசர தேவைக்காக தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர். இதற்காகவே குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான நிதி நிறுவனங்களும், ஆட்டோ பைனான்ஸ், மைக்ரோ பைனான்ஸ் என்று அழைக்கப்படும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த நிதி நிறுவனங்களும் புற்றீசல்போல் முளைத்து இயங்கிருகின்றன.

இவர்களுக்கு போன் செய்து கடன் கேட்ட அடுத்த ஓரிரு நிமிடங்களில் வீடு தேடி வந்து லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அதற்கு ஈடாக சொத்து பத்திரங்கள், ஏடிஎம் கார்டு, வாகனங்களின் ஆர்சி புத்தகங்களை பிணையமாக பெற்றுச் செல்கின்றனர். அதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை உழவர் சந்தையில் சில கந்து வட்டிக்காரர்கள் அதிகாலை 4 மணிக்கே முகாமிட்டு விடுகின்றனர். இவர்கள் காலையில் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு ரூ.500 கொடுத்து விட்டு மதியம் 12 மணிக்குள் ரூ.600 ஆக வசூலிக்கின்றனர்.

மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்த முடியாதவர்கள் 2 மணிக்குள் வாங்கிய பணத்திற்கு அபராதமாக 20 சதவீதம் வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டும். அதன்பிறகு 2 மணிக்குள் பணம் செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பெருந்தொகையை வசூல் செய்கின்றனர். இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் ஊரை விட்டு வெளியேறி திருப்பூர், ஓசூர், பெங்களூரு, கோவை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில், குடியாத்தம் நகரம் மட்டுமின்றி தாலுகா முழுவதும் கந்து வட்டிகாரர்கள் குறித்த பட்டியலை உளவுபிரிவு போலீசார் தயாரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால்,அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் நேர்மையை காவல்துறை நிரூபிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்:
தொழிலாளர்கள் நிறைந்த குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு சிறு கடன்கள் வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் கந்துவட்டி கும்பல்களிடம் இருந்து ஏழைத்தொழிலாளர் குடும்பங்களையும், சிறுவியாபாரிகளையும் காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரவுடிகளும் கந்துவட்டி கும்பலும்:
குடியாத்தம் நகரம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சமீபத்தில் ரவுடிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு கந்து வட்டி கும்பல்தான் காரணம்இவர்கள் பணம் செலுத்தாதவர்களின் விவரங்களை ரவுடிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகின்றனர். இந்த தகவல்களை பெற்று கொண்டு உரியவர்களை தேடி செல்லும் ரவுடிகள் அவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

Tags : Sivakasi , Beedi, firebox industry, petty sivakasi, blacksmith, degenerate settlement town, workers' families
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து