×

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு இன்று காலை கூடுகிறது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒரு முறை பொதுக்குழுவையும் 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அந்த அடிப்படையில் திமுக பொதுக்குழு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கூடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 10ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், கட்சியின் சட்டத்திருத்தம், உள்ளாட்சி தேர்தல், தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்ட பொருள் குறித்து விவாதிக்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கான உண்மையான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் நேர்மையாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை மத்திய அரசிடமிருந்தும், அதிமுக அரசிடமிருந்தும் மீட்பதற்கு திமுக பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறும் கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : DMK General Committee ,MK Stalin , The leadership of MK Stalin, DMK General Committee, today, the local election, the main consultation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...